குடியரசு தின விழாவை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு தலைவர்கள் வாழ்த்து

குடியரசு தின விழாவை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு தலைவர்கள் வாழ்த்து
Updated on
1 min read

சென்னை: நாட்டின் 73-வது குடியரசு தின விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, பொதுமக்களுக்கு கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி: கடந்த காலங்களில் நடைபெற்ற குடியரசு தின விழாக்களில் மாநிலங்கள் வடிவமைக்கும் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு மிகுந்த வரவேற்பையும், முக்கியத்துவத்தையும் பெற்றது. ஆனால், நடப்பு ஆண்டில் பாஜக அரசின் பாரபட்ச போக்கு காரணமாக குடியரசு தின அணிவகுப்பில் பாஜக ஆளும் மாநிலங்கள் சார்பாக அலங்கார ஊர்திகள் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எதிர்கட்சிகள் ஆட்சிபுரியும் தமிழகம், கேரளா, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களின் அலங்காரஊர்திகள் பங்கேற்பது முற்றிலும்மறுக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவின் கூட்டாட்சி தத்துவத்தை பலவீனப்படுத்துவதுடன், பன்முக கலாச்சாரத்தை ஏற்க மறுக்கிற போக்காகவே காண முடிகிறது.

இதன் மூலம் ஒற்றைக் கலாச்சாரத்தை நடைமுறைப்படுத்த பாஜக அரசு முயற்சி செய்வது வேதனைக்குரியது. எனவே, வேற்றுமைகளில் ஒற்றுமை கண்டு, மத நல்லிணக்கம், சமூகநீதி ஏற்படும் சூழலை உருவாக்க இந்நாளில் உறுதி ஏற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: அரசியலமைப்புச் சட்டம் அமலுக்கு வந்த நாளான குடியரசு தினத்தைக் கொண்டாடும் மத்திய, மாநில அரசுகள், அந்த சட்டத்தை முறையாகவும், முழுமையாகவும் கடைபிடிக்க வேண்டும். நாட்டு மக்களும் அரசியலமைப்பு சட்டத்துக்கு உட்பட்டு செயல்பட வேண்டும். இந்தக் குடியரசு தினம் ஒவ்வொருவருக்கும் முன்னேற்றத்தையும், பாதுகாப்பான வாழ்க்கையையும் அமைத்துக் கொடுக்க வாழ்த்துகிறேன்.

சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார்: அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள உரிமைகளை ஒவ்வொரு குடிமகனும் முழுமையாகப் பெறுவதில்தான் நம் குடியரசின் முழு வெற்றி அமைந்துள்ளது. ஒவ்வொருவரும் சமூகப் பொறுப்பை உணர்ந்து, நமது ஒருங்கிணைந்த ஆற்றலை நாட்டின் வளர்ச்சிக்காக முழுமையாக அர்ப்பணித்திட உறுதியேற்று, அதை செயலில் வெளிப்படுத்துவோம்.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச் செயலர் டிடிவி.தினகரன்: ஜனநாயகத்தைக் காக்கவும், வேற்றுமையில் ஒற்றுமை என்ற இந்தியாவின் தனிப்பெருமையைப் பாதுகாக்கவும், எல்லா தரப்பு மக்களும் நிம்மதியோடும், ஒற்றுமையோடும், நல்லிணக்கத்தோடும் வாழ்ந்திடுவதற்கான சூழ்நிலையைப் பேணவும் இந்நாளில் உறுதியேற்போம்.

மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா: இந்திய மக்களின் பன்மைத்துவம் நிலைத்து நிற்கவும், சமூக நீதியும், மதச் சார்பின்மையும் நீடித்து செயல்படவும், அரசமைப்புச் சட்டத்தின் முகப்பு உரையில் கூறப்பட்டுஉள்ள நோக்கங்கள் பாதுகாக்கப்படவும் நாம் ஒவ்வொருவரும் இந்நாளில் சூளுரை ஏற்போம். வேற்றுமையில் ஒற்றுமை என்ற தத்துவத்தை இந்திய மக்கள் அனைவரும் உறுதியுடன் கடைபிடிப்போம்.

இதேபோல, கோகுல மக்கள் கட்சித் தலைவர் எம்.வி.சேகர், மக்கள் எழுச்சி ஜனநாய கட்சி மாநிலத் தலைவர் காயல் அப்பாஸ், இந்திய ஜனநாயக கட்சி தலைவர் ரவி பச்சமுத்து, எஸ்டிபிஐ மாநிலத் தலைவர் நெல்லை முபாரக், மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச் செயலர் மு.தமிமுன் அன்சாரி ஆகியோரும் குடியரசு தின வாழ்த்துகளைத் ெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in