

ராமேசுவரம்: இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 56 பேரை விடுதலை செய்தும், விசைப்படகின் உரிமையாளர்கள் ஆவணங்களுடன் ஏப்.1-ல் நேரில் ஆஜராகவும் இலங்கை ஊர்காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டது.
ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற தென்னரசு, லியோன், பீட்டர் கருப்பையா உள்ளிட்ட 6 பேருக்குச் சொந்தமானவிசைப் படகுகளையும், அதில்இருந்த 43 மீனவர்களையும், புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டிணத்தில் இருந்து சென்ற2 விசைப்படகுகளையும், அதில்இருந்த 13 மீனவர்களையும் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர்.
சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தி ராமேசுவரத்தில் மீனவர்கள் டிச.20-ம் தேதியில் இருந்து வேலைநிறுத்தம், ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் என தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். மேலும், இதுதொடர்பாக வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரிடம் முதல்வர் மு.க.ஸ்டாலினும் வலியுறுத்தினார். இந்த விவகாரம் குறித்து தமிழக எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பிரச்சினைஎழுப்பினர். மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், இலங்கை நிதியமைச்சர் பசில் ராஜபக்சவிடம் மீனவர்களை விடுதலை செய்ய கோரிக்கை விடுத்தார்.
இந்நிலையில் தமிழக மீனவர்கள் 56 பேர் மீது எல்லை தாண்டி மீன்பிடித்தல், தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இலங்கை ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. நீதிபதி கஜநிதிபாலன், ‘இம்மீனவர்கள் மீண்டும் இலங்கை எல்லைக்குள் மீன் பிடித்தால் 6 மாதங்கள் சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் 56 மீனவர்களையும் விடுதலை செய்தும், ஏப்.1-ல் 8 படகுகளின் உரிமையாளர்களும் உரிய ஆவணங்களுடன் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும்’ எனவும் கூறி வழக்கை தள்ளி வைத்தார்.