

தற்கொலை செய்துகொண்ட தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த பள்ளி மாணவிக்கு புஷ்பாஞ்சலி செலுத்தும் நிகழ்வு, திருப்பூர் ராயபுரத்தில் இந்து மக்கள் கட்சி சார்பில் நேற்று நடந்தது. கட்சியின் நிறுவனத் தலைவர் அர்ஜூன் சம்பத் பங்கேற்று, மாணவியின் படத்துக்கு, மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கிறிஸ்தவ கல்வி நிறுவனத்தால் மதமாற்றம் செய்ய மாணவி வற்புறுத்தப்பட்டுள்ளார். கழிப்பிடத்தை சுத்தம் செய்ய, மாணவியை வற்புறுத்தியுள்ளனர். மனமுடைந்த அவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். அரியலூர் மாணவி அனிதாவுக்கு, அனைத்து கட்சியினரும் குரல் கொடுத்தனர். இன்றைக்கு மவுனமாக உள்ளனர். மாணவி விவகாரத்தில், திமுக அரசு அரசியல் செய்கிறது. நீதிமன்ற மேற்பார்வையில் விசாரணை நடக்கிறது. மாணவி குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். அரசு சார்பில், வீடு வழங்க வேண்டும். தமிழர்களின் கலாச்சாரம், பண்பாட்டை கொச்சைப்படுத்தும் வகையில் செயல்படும் யூ டியூப் சேனல்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.