

அவிநாசி அருகே பாப்பான்குளம் கிராமத்தில் நேற்று முன்தினம் தோட்டத்துக்குள் புகுந்த சிறுத்தை தாக்கியதில், வன ஊழியர் உட்பட 3 பேர் காயம் அடைந்தனர். நேற்று 2-வது நாளாக ஆனைமலை புலிகள் காப்பக இயக்குநர் ராமசுப்பிரமணியன், மாவட்ட துணை வனப்பாதுகாவலர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட வன அலுவலர் தேஜஸ்வி தலைமையிலான வனத்துறையினர் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியுள்ளனர். 3 இடங்களில் கூண்டுவைத்து, அதில் மாட்டிறைச்சியை வைத்து இரவு முழுவதும் கண்காணித்தனர். ஆனால் சிறுத்தை சிக்கவில்லை.
சிறுத்தை பதுங்கியிருந்த பகுதி, தென்னந்தோப்பு என்பதால், உயரம் குறைந்த தென்னை மரங்களிலும் சோதனையிட்டனர். ஆனால் சிறுத்தை தென்படவில்லை. சம்பவ இடத்தில் கால்நடை மருத்துவர் சுகுமார் தலைமையிலான மருத்துவர்கள், மயக்க ஊசி செலுத்தி சிறுத்தையை பிடிக்க தயார் நிலையில் உள்ளனர். தோட்டத்துக்குள் வெடி வைத்தும், சைரனை ஒலிக்கவிட்டும் வனத்துறையினர் பார்த்தனர். சிறுத்தை வெளியே வரவில்லை.
இந்நிலையில் ஆனைமலை புலிகள் காப்பக இயக்குநர் ராமசுப்பிரமணியன், ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் கூறும்போது, ‘‘நேற்று முன்தினம் 3 பேரை தாக்கிய சிறுத்தை, இரவு நேரத்தில் இடம்பெயர்ந்திருக்கலாம் என சந்தேகிக்கிறோம். பாப்பான்குளத்தில் சிறுத்தை தென்படவில்லை. பொதுமக்களின் பயத்தை போக்கும்வகையில் சுற்றுவட்டார கிராமங்கள், ஓடைப்பள்ளம், கோயில்கள், கரும்புத் தோட்டம், மாமரத் தோட்டம் உள்ளிட்ட பகுதிகளை தொடர்ந்து கண்காணிக்க உள்ளோம்’’ என்றார்.
திருப்பூர் மாவட்ட துணை வனப்பாதுகாவலர் கிருஷ்ணமூர்த்தி கூறும்போது, ‘‘பவானிசாகர் வழியாக இப்பகுதிக்கு சிறுத்தை வந்திருக்கலாம். தற்போது 80 ஊழியர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். நேற்று முன்தினம் இரவு 7.30 மணிக்கு கடைசியாக சிறுத்தையை வனத்துறையினர் நேரில் பார்த்துள்ளனர். அதன்பின்னர் காணவில்லை. சிறுத்தையை தேடும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது,’’ என்றார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசாங் சாய், சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்நிலையில் பாப்பான்குளத்தை அடுத்துள்ள பஞ்சலிங்கம்பாளையத்தில் சிறுத்தை புகுந்துவிட்டதாக கிடைத்த தகவலின் பேரில், அங்கும் வனத்துறையினர் சோதனை நடத்தினர். அங்கும் சிறுத்தை இல்லை. அதன்பிறகே இத்தகவல் வதந்தி என தெரியவந்தது.