

சென்னை: தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, தலைமைச் செயலர் இறையன்பு தலைமையிலும், மாநில தேர்தல் ஆணையம் உள்ளிட்ட அலுவலகங்களிலும் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது.
ஆண்டுதோறும் ஜன.25-ம் தேதி நாடு முழுவதும் தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, புதிய வாக்காளர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டைகள் வழங்கப்படும்.
டெல்லியில் நடைபெறும் தேசிய வாக்காளர் தின விழாவில், சிறந்த தலைமை தேர்தல் அதிகாரிக்கான விருது, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹுவுக்கு வழங்கப்படுகிறது.
இதையொட்டி, அவர் டெல்லி சென்றுள்ளதால், சென்னையில் வழக்கமாக ஆளுநர் தலைமையில் நடைபெறும் வாக்காளர் தின விழா நேற்று நடக்கவில்லை.
இந்நிலையில், தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, தமிழக அரசு அலுவலகங்களில் வாக்காளர் தின உறுதிமொழி ஏற்கப்பட்டது.
தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலர் இறையன்பு தலைமையில் உறுதிமொழி ஏற்கப்பட்டது. சென்னை கோயம்பேட்டில் உள்ள மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில் மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் தலைமையில் வாக்காளர் தின உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதில் தேர்தல் ஆணைய செயலர் சுந்தரவல்லி மற்றும் ஆணைய அலுவலர்கள், பணியாளர்கள் பங்கேற்றனர்.
சென்னை பெருநகர மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகையில், மாவட்ட தேர்தல் அலுவலரும், மாநகராட்சி ஆணையருமான ககன்தீப் சிங் பேடி தலைமையில் மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் வாக்காளர் தின உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இதில் கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர்கள், துணை ஆணையர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதுதவிர, சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பொதுப்பணி, வேளாண்மைத் துறை அலுவலகங்கள், எழிலகம் வளாகம் உட்பட பல்வேறு அரசுத் துறை அலுவலகங்களிலும் தேசிய வாக்காளர் தின உறுதிமொழி ஏற்கப்பட்டது.