Published : 26 Jan 2022 08:31 AM
Last Updated : 26 Jan 2022 08:31 AM
தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சியில் ஒப்பந்ததாரருக்கு ரூ.4 கோடி நிலுவை இருப்பதால் குப்பை அகற்றும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. குடியிருப்பு பகுதி, குப்பைக் கிடங்கிலிருந்து, குப்பை அகற்றப்படாமல் தேங்கிக் கிடப்பதாகக் குடியிருப்போர் நலச் சங்கத்தினர் புகார் தெரிவித்துள்ளனர்.
தாம்பரம் மாநகராட்சியில் உள்ள 70 வார்டுகளில் தினமும் சுமார் 300 டன் குப்பை சேகரமாகிறது. இது பல்லாவரம் - துரைப்பாக்கம் ரேடியல் சாலை மற்றும் மேற்குத் தாம்பரம், கன்னடபாளையம் ஆகியஇடங்களில் உள்ள குப்பை மாற்று நிலையங்களில் கொட்டப்பட்டு அங்கிருந்து காட்டாங்கொளத்தூர் அருகே ஆப்பூர் கிராமத்தில் உள்ள குப்பைக் கிடங்கில் கொட்டப்படுகிறது. இந்த பணிகளை மேற்கொள்ள ரேடியல் சாலையில் உள்ள குப்பைக் கிடங்குக்குத் தனியாகவும் கன்னடபாளையம் குப்பைக் கிடங்குக்குத் தனியாகவும் ஒப்பந்தம் விடப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் 2 நிறுவனங்களுக்கும் மாநகராட்சி வழங்க வேண்டிய ரூ.4 கோடி நிலுவையில் உள்ளது.
இதுகுறித்து குடியிருப்போர் நலச் சங்க நிர்வாகிகள் சிலர் கூறும்போது, "பல்லாவரத்தில் குப்பையை அகற்றும் நிறுவனத்துக்கு ரூ.1.5 கோடியும் தாம்பரத்தில் குப்பை அகற்றும் பணியை மேற்கொள்ளும் நிறுவனத்துக்கு ரூ.2.5 கோடியும் தாம்பரம் நகராட்சி நிர்வாகம் பாக்கி வைத்துள்ளது. இதனால் அவர்கள் குப்பை மாற்று நிலையத்திலிருந்து குப்பையைச் சரிவர அப்புறப்படுத்துவதில்லை. இதனால் குப்பை மாற்று நிலையத்தில் குப்பை அதிகளவில் தேங்கி உள்ளது.
இதனால் குடியிருப்பு பகுதிகளில் குப்பை அகற்றும் பணிபாதிக்கப்பட்டுள்ளது. கடந்த சிலநாட்களா குப்பைக் கிடங்கிலிருந்து ஆப்பூருக்கு குப்பை எடுத்துச் செல்லும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. நிலுவைத் தொகையைக் காரணம் காட்டி, ஒப்பந்த நிறுவனம் குப்பையை அகற்றாததால் குப்பை மலைபோல் தேங்கியுள்ளது. இந்த பிரச்சினைக்கு மாநகராட்சி நிர்வாகம் விரைந்து தீர்வு காண வேண்டும்" என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT