

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயிலில் மாசி மாத பிரம்மோற்சவம் வரும்பிப்ரவரி மாதம் 8-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளதாக, கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
காஞ்சிபுரம் நகரில் சக்தி பீடங்களில் ஒன்றாக விளங்கும் பிரசித்தி பெற்ற காமாட்சியம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில், ஆண்டுதோறும் மாசி மாதத்தில் பிரம்மோற்சவம் நடைபெறும். இந்தாண்டுக்கான பிரம்மோற்சவம் வரும் பிப்ரவரி மாதம் 8-ம் தேதி அதிகாலை 5 மணி முதல் 6 மணிக்குள்ளான முகூர்த்தத்தில் கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது.
அடுத்த 10 நாட்களுக்குக் காலை, இரவில் காமாட்சியம்மன் பல்வேறு அலங்காரங்களில் வீதியுலா வரும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதன்படி, பிப்ரவரி மாதம் 10-ம் தேதி இரவு யானை வாகன உற்சவம், 13-ம் தேதி தங்க கிளி, 14-ம் தேதி தேரோட்டம், 16-ம் தேதி இரவு வெள்ளித்தேர், 18-ம் தேதி தங்க காமகோடி விமானம் ஆகிய உற்சவங்கள் நடைபெற உள்ளன.
கரோனா தொற்று பரவல் தடுப்புநடவடிக்கையாக வெள்ளி, சனிமற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகியநாட்களில் கோயில்களில் பக்தர்களுக்கு அனுமதியில்லாததால், மேற்கண்ட உற்சவம் மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலின் பேரில், கோயிலின் உட்பிரகாரத்திலோ அல்லது ராஜவீதிகளிலோ அம்பாள் வீதியுலா நடைபெறும் எனக் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.