

பாம்பன் சாலைப் பாலத்தின் தூண்களில் விரிசல்கள், சேதமடைந்த பகுதிகளை கண்டறிந்து மராமத்து செய்யும் பணிகள் தொடங்கி உள்ளன.
கடந்த 17.11. 1974-ம் ஆண்டில் அன்றைய பிரதமர் இந்திராகாந்தி யால், பாம்பன் கடலில் சாலைப் பாலம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது. அதன்பிறகு, 2.10.1988-ல் பிரதமர் ராஜீவ்காந்தியால் இப்பாலம் திறக்கப் பட்டு ராமேசுவரத்துக்கு போக்குவரத்து தொடங்கியது. இப் பாலத்துக்கு அன்னை இந்திரா காந்தி சாலைப்பாலம் எனப் பெயரிடப்பட்டது.
இப்பாலத்தில் போக்குவரத்து தொடங்கி 33 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், 5 ஆண்டுக்கு ஒருமுறை, துருப் பிடிக்காத பெயின்ட் மட்டும் அடிப்பது வழக்கம்.
2015 மற்றும் 2016 ஆகிய 2 ஆண்டுகளாக பாலத்தில் ரூ. 18.56 கோடியில் முழுமையான பராமரிப்பு பணி, ரூ.2.70 கோடியில் பாலத்தில் புதிய சாலை அமைக்கப்பட்டன.
ஆனால், பராமரிப்பு பணிகள் தரம் குறைந்து இருப்பதால், பாலத்தைத் தாங்கி நிற்கும் பல தூண்களில் விரிசல் ஏற்படத் தொடங்கின. இதனைத் தொடர்ந்து தூண்களில் விரிசல்கள், பாலத்தின் கீழ், மேல் பகுதியில் சேதமடைந்த பகுதிகளை கண்டறிந்து மராமத்து செய்யும் பணிகளை நெடுஞ் சாலைத்துறையினர் தொடங்கி உள்ளனர்.