

பெரம்பலூர் அருகே துப்பாக்கி சுடும் பயிற்சின்போது குறி தவறிய குண்டு வீட்டின் மேற்கூரையில் விழுந்ததால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
பெரம்பலூர் மாவட்டம், நாரணமங்கலம் பகுதியில் தமிழக போலீஸாரின் துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் உள்ளது. இங்கு தமிழக போலீஸார் மட்டுமின்றி ரயில்வே போலீஸாரும் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி, ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸார் இங்குள்ள மையத்தில் ஜன.21 முதல் 24 வரை துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டனர். பயிற்சியின் இறுதி நாளான நேற்று முன்தினம், ரயில்வே பாதுகாப்புப் படைவீரர் ஒருவர் பயன்படுத்திய துப்பாக்கியில் இருந்து பாய்ந்த குண்டு, பயிற்சி மையத்தின் பின்புறம் 2 கி.மீ தொலைவில் உள்ள மருதடி ஈச்சங்காடு கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவரின் வீட்டின் ஆஸ்பெஸ்டாஸ் மேற்கூரை மீது விழுந்து துளை ஏற்படுத்தியது. இதில், அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே, இந்த சம்பவம் குறித்து பாடாலூர் போலீஸாருக்கு சுப்பிரமணி நேற்று தகவல் தெரிவித்தார். இதையடுத்து, மாவட்ட எஸ்பி மணி, கோட்டாட்சியர் நிறைமதி ஆகியோர் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது, குடியிருப்புப் பகுதியில் உள்ள துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தை நிரந்தரமாக மூட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
கடந்த மாதம் புதுக்கோட்டை மாவட்டம், நார்த்தாமலை அருகே துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தில் சிஐஎஸ்எப் வீரர்களும், தமிழக போலீஸாரும் பயிற்சி மேற்கொண்டபோது, துப்பாக்கி குண்டு பாய்ந்து 11 வயது சிறுவன் உயிரிழந்தார். இந்நிலையில், தற்போது பெரம்பலூர் அருகே துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தில் இருந்து குறி தவறிய குண்டு, வீட்டின் மேற்கூரையில் விழுந்துள்ள சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.