Published : 25 Jan 2022 06:55 PM
Last Updated : 25 Jan 2022 06:55 PM

ஆதிக்கத்தின் குறியீடாக இந்தி திணிப்பு: மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: "இந்தியை திணிக்க நினைப்பவர்கள், அதனை ஆதிக்கத்தின் குறியீடாக திணிக்கிறார்கள்" என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

மொழிப்போர் தியாகிகள் தினத்தையொட்டி காணொலிக் காட்சி வாயிலாக வீரவணக்க நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், "இந்தி மட்டுமல்ல எந்த மொழிக்கும் தனிப்பட்ட முறையில் நாம் எதிரிகள் அல்ல. நாம் இந்தியை எதிர்க்கவில்லை. இந்தியின் ஆதிக்கத்தைத்தான் எதிர்க்கிறோம். இந்தி மொழியை அல்ல, இந்தி திணிப்பைத்தான் எதிர்க்கிறோம்.நாம் தமிழ்மொழி பற்றாளர்களேத் தவிர, எந்த மொழிக்கும் எதிரான வெறுப்பாளர்கள் அல்ல. ஒருவர் ஒரு மொழியைக் கற்றுக்கொள்வது என்பது அவரது விருப்பத்தைச் சார்ந்ததாக இருக்க வேண்டுமே தவிர, வெறுப்பைத் தூண்டும் வகையில் அது திணிப்பாக மாறிவிடக்கூடாது.

ஆனால் இந்தியை திணிக்க நினைப்பவர்கள், அதனை ஆதிக்கத்தின் குறியீடாக திணிக்கிறார்கள். ஒரே ஒரு மதம்தான் என்று நினைப்பதைப் போல, ஒரே ஒரு மொழிதான் இருக்க வேண்டும், அது இந்தியாகத்தான் இருக்க வேண்டும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். இந்தியை திணிப்பதன் மூலமாக, இந்தி பேசும் மக்களை அனைத்து துறைகளிலுமே திணிக்கப் பார்க்கிறார்கள். இந்தியை திணிப்பதன் மூலமாக, மற்ற மொழி பேசக்கூடிய மக்களை இரண்டாம்தர குடிமக்களாக மாற்ற பார்க்கிறார்கள். ஒருவனின் தாய்மொழி நிலத்தைப் பறித்து அந்த இடத்தில் இந்தியை உட்கார வைக்க பார்க்கின்றனர். அதனால்தான் இந்தி மொழியின் ஆதிக்கத்தை தொடர்ந்து நாம் எதிர்த்து கொண்டிருக்கிறோம். அவர்களுக்கு தமிழ் என்றால், தமிழ்நாடு என்றால் ஏனோ கசக்கிறது.

ஜனவரி 26-ஆம் நாள் நாளை குடியரசு நாள் கொண்டாடப்படவுள்ளது. இந்திய நாட்டிற்கு இரண்டு முக்கியமான நாள்கள், ஆகஸ்ட் 15 சுதந்திர தினம், ஜனவரி 26 குடியரசு தினம். குடியரசு தினவிழாவில் டெல்லியில் நடைபெறும் அலங்கார ஊர்தி அணிவகுப்பிற்கு அனுப்பி வைக்கப்பட்ட தமிழக ஊர்திக்கு திட்டமிட்டு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதற்காக மத்திய அரசு கூறியுள்ள காரணத்தை ஏற்றுக்கொள்ள முடியாது.

வீரமங்கை வேலுநாச்சியார், மானங்காத்த மருதுபாண்டியர், மகாகவி பாரதியார், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரை யார் என்று கேட்பதற்கு இவர்கள் யார்? பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக முதல் குரல் எழுப்பிய மண் தென்னாடு... அதிலும் குறிப்பாக தமிழ்நாடு. சிப்பாய்க் கலகத்துக்கு 50 ஆண்டுகளுக்கு முன் 1806-ஆம் ஆண்டு, வேலூரில் புரட்சி நடந்துள்ளது. அதற்குமுன் நெற்கட்டும் சேவலில் பூலித்தேவன், சிவகங்கையில் வேலு நாச்சியார், பாஞ்சாலங்குறிச்சியில் வீரபாண்டிய கட்டபொம்மன், மருது சகோதரர்கள், ராமநாதபுரத்தில் மயிலப்பன், கான்சாஹிப் மருதநாயகம், தளபதி சுந்தரலிங்கம், தீரன் சின்னமலை, வீரன அழகுமுத்துகோன் இப்படி பலரும் போராடிய மண் இந்த தமிழ் மண். இவர்கள் யார் என கேட்பவர்கள் முதலில் பிரிட்டிஷார் எழுதிய வரலாற்றை எடுத்து படித்து பாருங்கள்" என்று பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x