'இது ஒரு டம்மி அரசு... இரு மாநிலங்களில் ஆளுநர் தமிழிசை கொடியேற்றுவதை ஏற்க முடியாது' - நாராயணசாமி

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

புதுச்சேரி: "புதுச்சேரி, தெலங்கானா என இரண்டு மாநிலங்களிலும் ஆளுநர் தமிழிசை கொடியேற்றுவது என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று; நிர்வாகத்தை ஆளுநரிடம் கொடுத்துவிட்டு முதல்வர் ரங்கசாமி வேடிக்கை பார்க்கிறார்" என்று முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோப் பதிவில் கூறியது: "குடியரசு தினத்தன்று துணைநிலை ஆளுநர் பொறுப்பு வகிக்கும் தமிழிசை சவுந்தரராஜன், புதுச்சேரியிலும், தெலங்கானாவிலும் தேசியக்கொடி ஏற்றி வைக்கவுள்ளதாக தகவல் வந்துள்ளது. இந்திய சரித்திரத்தில் ஓர் ஆளுநர் இரண்டு மாநிலங்களில் ஒரேநேரத்தில் தேசியக்கொடி ஏற்றிய சம்பவம் எங்கும் நடந்ததில்லை.

புதுச்சேரி மாநிலத்தில் கொடி ஏற்ற தமிழிசைக்கு உரிமை உள்ளது. ஆனால், புதுச்சேரி, தெலங்கானா என இரண்டு மாநிலங்களிலும் கொடியேற்றுவது என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. புதுவையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு உள்ளது. தமிழிசை தெலங்கானா மாநிலத்தில் நியமிக்கப்பட்ட நிரந்தர ஆளுநர். எனவே, அவர் தெலங்கானாவில் கொடியேற்ற வேண்டும். புதுவையை பொறுத்தவரை முதல்வர் கொடியேற்றுவதற்கு துணைநிலை ஆளுநர் உள்துறை அமைச்சத்துக்கு கடிதம் எழுதி அனுமதி பெற்று தர வேண்டும்.

ஆனால், விடியற்காலையில் ஒரு இடத்திலும், அதன்பிறகு புதுச்சேரியிலும் கொடியேற்றுகிறார். மத்திய அரசானது புதுவைக்கு நிரந்தர ஆளுநரை நியமிக்காததால் இதுபோன்ற சம்பவங்கள் நடந்திருக்காது. இதற்கு மத்திய அரசு பொறுப்பேற்க வேண்டும். ஆளுநருக்கு மத்திய அரசு அறிவுறுத்தி இருக்க வேண்டும்.மாநில வளர்ச்சியை பின்னுக்கு தள்ளிவிட்டு நிர்வாகத்தை ஆளுநரிடம் கொடுத்துவிட்டு முதல்வர் ரங்கசாமி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார். இது ஒரு டம்மி அரசாக செயல்படுகிறது" என்று நாராயணசாமி கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in