Published : 25 Jan 2022 04:53 PM
Last Updated : 25 Jan 2022 04:53 PM

அரியலூர் மாணவி தற்கொலை விவகாரத்தில் உண்மைத்தன்மையை கண்டறிய விஜயகாந்த் வலியுறுத்தல்

கோப்புப் படம்

சென்னை : அரியலூர் மாணவி தற்கொலை விவகாரத்தில் உண்மைத்தன்மையை கண்டறிந்து குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை கிடைக்க காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அரியலூர் மாவட்டம் வடுகப்பாளையத்தைச் சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர், தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியை அடுத்த மைக்கேல்பட்டியில் உள்ள தனியார் கிறிஸ்துவ பள்ளியில் பயின்று வந்தார். அருகிலுள்ள விடுதியில் தங்கி பயின்று வந்த மாணவி பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டதாக வெளியான செய்தி அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது.

இறப்பதற்கு முன்பு மாணவி அளித்த வாக்குமூலத்தில் இரண்டு வருடங்களுக்கு முன்பாக பள்ளி நிர்வாகம் என்னை மதமாறும்படி கட்டாயப்படுத்தியதாகவும், அதற்கு நான் ஒத்துவராததால் அதிக வேலை வாங்கி என்னை கொடுமைப்படுத்துவதாகவும் கூறியுள்ளார். எனவே, அதன் உண்மைத்தன்மையை கண்டறிந்து, மாணவியை மதம் மாற வற்புறுத்தியது தெரியவந்தால் யாராக இருந்தாலும் அவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். சமீபகாலமாக மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது மிகுந்த மனவேதனை அளிக்கிறது.

எந்தப் பிரச்சனைக்கும் தற்கொலை தீர்வாகாது என்பதை மாணவர்கள் முதலில் புரிந்துகொள்ள வேண்டும். மாணவச் செல்வங்களே... தற்கொலை செய்துகொள்ளும் எண்ணத்தை கைவிட்டு, பிரச்சினைகளை துணிந்து எதிர்கொள்ள கற்றுக் கொள்ளுங்கள்.

மாணவி தற்கொலை விவகாரத்தில் தண்டனைக்குரியவர்கள் யார் என்பதை தமிழக அரசு உடனடியாக கண்டறிந்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும்" என்று விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x