Published : 25 Jan 2022 04:16 PM
Last Updated : 25 Jan 2022 04:16 PM

பயிர் காப்பீடு வழங்கக் கோரி விவசாயிகள் போராட்டம்: கோவில்பட்டியில் 209 பேர் கைது

கோவில்பட்டி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பயிர் காப்பீடு வழங்க வலியுறுத்தி அடுத்தடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 209 விவசாயிகள் சங்கத்தினரை போலீஸார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் 2020-21-ம் ஆண்டில் செலுத்திய பயிர் காப்பீடு இதுவரை விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லை. கால தாமதமில்லாமல் விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டை வழங்க வலியுறுத்தி கோவில்பட்டியில் தமிழ் விவசாயிகள் சங்கம் சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது. மாநில தலைவர் நாராயணசாமி தலைமை நடைபெற்ற போராட்டத்தில் தென் மண்டல ஒருங்கிணைப்பாளர் கவலூர் சுப்பாராஜ், மாவட்ட தலைவர்கள் சௌந்திரபாண்டியன், டி.எஸ்.நடராஜன், வெள்ளத்துரை உள்ளிட்ட பலர் பயணியர் விடுதி முன்பு மறியலில் ஈடுபட்டனர். அப்போது விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 27 பெண்கள் உள்ளிட்ட 140 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

இதேபோல் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் எஸ்.எம்.ராமையா தலைமையில் தாலுகா தலைவர்கள் ரவீந்திரன், சந்திரமோகன், தாலுகா செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, வேலாயுதம், லெனின்குமார், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலக்குழு உறுப்பிபனர் பாலமுருகுன் உள்ளிட்ட பலர் பயணியர் விடுதியில் இருந்து ஊர்வலமாக செல்ல முற்பட்டனர். அவர்களை காவல்துறையினர், சுமார் 30 அடி தூரத்தில் மறித்தனர். இதனால் விவசாயிகள் போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். விவசாயிகளை மேலும் முன்னேறிச் செல்ல விடாமல் தடுத்தால் விவசாயிகள் சாலையை மறித்து நின்று கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 6 பெண்கள் உள்ளிட்ட 69 பேரை போலீஸார் கைது செய்தனர். சுமார் 20 நிமிடங்கள் வரை சாலையை மறித்ததால், போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனையடுத்து, கைது செய்யப்பட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் தனியார் மண்டபத்தில் அடைக்கப்பட்டிருந்தனர். அப்போது அவர்கள், வேளாண் துறை அலுவலர்கள் வந்து பேச்சுவார்த்தை நடத்தாவிட்டால் மதிய உணவு உண்ணாமாட்டோம் என உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து வேளாண்மை அலுவலர் ரீனா, உதவி வேளாண்மை அலுவலர் ரேவதி, வருவாய் ஆய்வாளர் சுந்தரமூர்த்தி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

மேலும் வேளாண் அதிகாரிகள், வேளாண்மை இணை இயக்குநரை செல்போனில் தொடர்பு கொண்டு பேசினர். வரும் பிப்15-ம் தேதிக்குள் பயிர் காப்பீடு விடுவிக்கப்படும் என அவர் கூறியதையடுத்து, விவசாயிகள் உண்ணாவிரதத்தை கைவிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x