மாமண்டூர் பயணவழி உணவகத்தில் அரசுப் பேருந்துகள் நிற்க தடை: தமிழக போக்குவரத்து துறை

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

சென்னை: செங்கல்பட்டு அருகே உள்ள மாமண்டூர் பயணவழி உணவகத்தில் அரசுப் பேருந்துகள் நின்று செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பயணவழி உணவங்களில் தரமற்ற உணவு கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியிருந்தனர். இந்தப் புகார் குறித்து மாமண்டூரில் உள்ள பயணவழி உணவகம் மற்றும் கடைகளில் அரசு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இதுதொடர்பான அறிக்கை அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து மாமண்டூர் பயணவழி உணவகத்தில் அரசுப் பேருந்துகள் நிற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் போக்குவரத்து கோட்ட மேலாளர் தலைமையில் நடந்த இந்த ஆய்வின் போது சம்பந்தப்பட்ட உணவகம், பொதுமக்கள் சுட்டிக்காட்டிய குறைகள் எதையும் சரிசெய்யவில்லை என்பது கண்டறியப்பட்டது. இதனைத்தொடர்ந்து இன்று முதல் அரசுப் போக்குவரத்துக்கழகப் பேருந்துகள் மாமண்டூர் பயணவழி உணவகத்தில் நின்று செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், சம்பந்தப்பட்ட உணவகத்தின் ஒப்பந்ததாரான சேலத்தைச் சேர்ந்த ஸ்டார் அசோசியேட் நிறுவனத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்து, தரமான உணவு வழங்கும் ஒப்பந்ததாரரை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அரசுப் பேருந்துகள் நின்று செல்லும் அனைத்து மோட்டல்கள் என அழைக்கப்படும் பயணவழி உணவகங்களில் ஆய்வு நடத்தப்படும் எனவும், தரம் குறைவாக மற்றும் கூடுதல் விலைக்கு உணவுப் பொருள்களை விற்பனை செய்யும் உணவகங்களின் ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டு, குறைந்த விலையில் தரமான உணவுகள் விற்பனை செய்யும் நிறுவனங்கள் தேர்வு செய்யப்படும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in