Published : 25 Jan 2022 12:21 PM
Last Updated : 25 Jan 2022 12:21 PM

தமிழகத்தில் கரோனா இறப்பு விகிதம் அதிகரிக்கவில்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: மொழிப்போர் தியாகிகள் தினத்தையொட்டி, விருகம்பாக்கம் அரங்கநாதன் நினைவிடத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, "தமிழகத்தில் கரோனா இறப்பு விகிதம் அதிகரிக்கவில்லை" என்று தெரிவித்தார்.

இது குறித்து மருத்துவத் துறை வெளியீட்டுள்ள செய்திக் குறிப்பு: மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (25-01-2022) 1965-ம் ஆண்டு மொழிப்போரில் உயிர்த் தியாகம் செய்த மொழிப்போர் வீரர் அரங்கநாதன் நினைவிடத்திற்கு சென்று மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். பின்பு தியாகி அரங்கநாதன் இல்லத்திற்கு சென்று அவரது மனைவி மல்லிகா அரங்கநாதன் மற்றும் மகன்களை சந்தித்து அவர்களுக்கு சிறப்பு செய்தார். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சுப்பிரமணியன் கூறியது:

"ஒவ்வொரு வருடமும் ஜனவரி 25-ம் தேதி மொழிப்போர் தியாகிகளுக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. இந்த வருடம் பேரிடர் காலமாக உள்ளதால் கூட்டம் சேர்க்காமல் இந்நிகழ்வு நடைபெற்று வருகிறது. முதல்வர் ஸ்டாலின் காணொலி மூலம் மொழிப்போர் வீரவணக்க நாள் கூட்டத்தில் இன்று மாலை உரையாற்றுகிறார்.

தமிழகத்தில் கரோனா இறப்பு விகிதம் அதிகரிக்கவில்லை; வயதானவர்கள், இணை நோய் உள்ளவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்கள். தீவிர சிகிச்சை பிரிவுக்கு சென்று சிகிச்சை பெற்றுவரும்போது இறப்பு ஏற்படுகிறது. அவர்களை பரிசோதிக்கும்போது அவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்படுகிறது. ஆனால் கரோனா மற்றும் ஒமைக்ரானால் ஏற்படும் இறப்பு என்பது குறைவாகத்தான் ஏற்படுகிறது.

பொங்கல் விழாவையொட்டி மாநகர பகுதிகளில் இருந்து கிராமங்களுக்கு பொதுமக்கள் சென்றதால் தொற்று நோய் பரவல் உயர்ந்து உள்ளது. இன்னும் மூன்று தினங்களில் தொற்றின் பரவலின் உண்மை நிலை தெரியவரும். அண்டை மாநிலங்களில் தொற்று அதிகரித்து காணப்பட்டாலும் முதல்வர் ஸ்டாலினின் தீவிர நடவடிக்கையால் பாதிப்பின் தீவிரம் குறைந்து காணப்படுகிறது.

தடுப்பூசி போன்ற தடுப்பு நடவடிக்கைகளில் தமிழகத்தில் கரோனா பாதிப்பு அதிகரிக்காமல் இருக்கிறது. கரோனா பரிசோதனைக்கு வருபவர்கள் சரியான தகவல்களை தெரிவிக்க வேண்டும் என்பது அவர்களின் கடமை. கண்காணிப்பை தவறாக புரிந்துகொள்ளக் கூடாது. தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் நலனுக்காகவே கண்காணிக்கப்படுகின்றனர். தொற்றின் பரவல் குறைந்தால் நிச்சயம் ஊரடங்கு என்பது தேவையில்லை" என அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் ரமேஷ், விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகர் ராஜா, கவிஞர் காசிமுத்துமாணிக்கம், மாவட்ட அவைத் தலைவர் குணசேகரன், பகுதிச் செயலாளர்கள் கண்ணன், ராசா உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x