

சென்னை: ‘பத்மபூஷண் விருது’ பெற்ற தொல்லியல் அறிஞர் இரா.நாகசாமிஉடல்நலக் குறைவால் சென்னையில் நேற்று முன்தினம் காலமானார். மகா பெரியவர் தன்னை ஒவ்வொரு விஷயத்திலும் வழிநடத்தினார் என்று 2014-ம் ஆண்டு ‘அனுஷம் பிரவசனம்’ என்ற தலைப்பில் உரை நிகழ்த்தும்போது நாகசாமி கூறியுள்ளார்.
அவரது உரையில் இருந்து சில குறிப்புகள்: காஞ்சி மகா பெரியவர் எப்போதுமே ஆத்ம ஸ்வரூபமாக இருந்தவர். யாராக இருந்தாலும் அவரைப் பார்த்தால், ‘இவர் நம்முடைய ஆச்சாரியர்’ என்ற எண்ணம் வரும்.
1955-58 காலகட்டத்தில் நான்,சென்னை விவேகானந்தா கல்லூரியில் எம்.ஏ. சம்ஸ்கிருதம் படித்துக்கொண்டிந்தபோது, சென்னை சம்ஸ்கிருத கல்லூரி, குப்புசாமி சாஸ்திரி ஹாலில் மகா பெரியவரை முதன்முதலில் தரிசித்தேன். அன்று முதல் அவரை ஆச்சாரியராக ஏற்றுக் கொண்டேன். அப்போது மகா பெரியவரை தரிசிக்க ராஜாஜி, சி.பி.ராமசாமி ஐயர் போன்றோர் வந்திருந்தனர்.
மகா பெரியவர் அனுக்கிரக பாஷணம் அளிப்பதற்கு முன்னர்,என்னை அழைத்து, “பொதுவாழ்க்கையில் ஈடுபடுபவர்கள் அனைவரையும் அரவணைத்துச் செல்லவேண்டும், யாரையும் உதாசீனப்படுத்தக் கூடாது, இறைவன் முன்னர்அனைவரும் ஒன்றுதான், யாரும் தன்னைத் தானே உயர்ந்தவர் என்றுஎண்ணக் கூடாது. நமக்குத் தெரிந்தநல்ல விஷயங்களை அனைவரிடத்திலும் கூற வேண்டும்” என்று கூறினார். அவர் கூறியது இன்றும் எனக்கு நினைவில் உள்ளது. அன்று முதல் அனைவரிடத்திலும் கோயில், பாரம்பரியம், சிலைகள் குறித்து கூறி வருகிறேன்.
மற்றொரு சமயம் என்னை திண்டிவனம் அருகே உள்ள முன்னூர் என்ற ஊருக்குச் சென்று அங்குள்ள கோயிலில் உள்ள கல்வெட்டைப் பார்த்து தகவல் சேகரித்து வரச் சென்னார். இந்த சம்பவமே எனது வாழ்க்கைப் பாதையைத் திட்டமிட உதவியது.
1961-ம் ஆண்டு புதுக்கோட்டை அருகே உள்ள இளையாத்தான்குடி என்ற ஊரில் 12 நாட்கள் ‘வியாஸ பாகவத் வித்வத் சதஸ்’ நடைபெற ஏற்பாடாகியிருந்தது. அதற்கு கம்போடியா, பாலி, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் இருந்து இந்து சமய ஆராய்ச்சியாளர்கள் வந்திருந்தனர். அங்கு கொரியா, வட கொரியா,சீனா உள்ளிட்ட நாடுகளில் ஓலைச்சுவடிகள் குறித்து ஆராய்ச்சி செய்துவிட்டு ரகுவீரா என்பவர் வந்திருந்தார். அவரை எனக்கு மகா பெரியவர் அறிமுகப்படுத்தினார்.
மேலும், கோயில், பாரம்பரியம், உற்சவ மூர்த்திகள், சாசனங்கள், செப்பு பட்டயங்கள் குறித்து ஒருகண்காட்சிக்கு ஏற்பாடு செய்யும்படி என்னைப் பணித்தார். அப்போதுநான் சென்னை அரசு அருங்காட்சியகத்தின் பாதுகாவலராக பணியாற்றிக் கொண்டிருந்ததால், இக்கண்காட்சி எனக்கு பெரிதும் உதவியது. மேலும் 10,000 பேர் கூடியிருந்த சபையில் பழைய பாரம்பரியம், பண்டைய காலத்தவர்கள் அதைப்பாதுகாத்த விதம் குறித்து என்னை பேசப் பணித்தார்.
மகான்கள் வாக்கு
மகான்கள் எது சொன்னாலும் அதன் அர்த்தம் பின்னால் ஓடி வரும். ஒருசமயம் என்னிடம் திடீரென்று, கோயில்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டால், பிறகு என்ன செய்ய வேண்டும், எவ்வாறு அக்கோயிலை புனரமைக்க வேண்டும், சிலைகள் களவு போனால் என்ன செய்ய வேண்டும் என்பன குறித்து ஆகமத்தில் கூறப்பட்டுள்ள தகவல்களைத் தெரிவித்தார். அப்போது அவர் ஏன் என்னிடம் அதைச் சொன்னார் என்று தெரியவில்லை.
லண்டன் நடராஜர் வழக்கில் லண்டன் உயர் நீதிமன்றத்தில் நிபுணத்துவ சாட்சியாக நான் அங்கு சென்றபோது, நீதிமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு ஆகமத்தில் இருந்து சில பதில்கள் அளிக்க வேண்டியிருந்தது. மகா பெரியவர் முன்னர் சொன்னது அப்போது பயன்பட்டது. கண்காட்சிகள் நிகழ்த்தியது, அங்கு பதிலளிக்க மேலும் உதவியது. ஒவ்வொரு சமயத்திலும் என்னை வழிகாட்டி, எந்தத் தகவல்கள் எங்கு கிடைக்கும் என்பதையும்தெரிவித்துள்ளார். கல்வெட்டுகளைப் படிப்பதன் அவசியத்தை வலியுறுத்தினார். அகஸ்திய பக்த விலாசம் என்ற நூலைப் படித்தால் தெளிவு கிடைக்கும் என்றார்.
திருச்சியில் நடைபெற்ற அனைத்திந்திய சம்ஸ்கிருத மாநாடு தொடர்பான நிர்வாகிகளை அழைத்து, ‘இவருக்கு சிலாலேக தத்வக்ஞன் பட்டத்தை கொடுக்க வேண்டும்’ என்று சொன்னார். தத்துவம் என்றால் சர்வதேச ஒற்றுமையை வளர்க்க வேண்டும் என்று அருளினார். அத்வைத கோட்பாடுகளுக்கு விளக்கங்கள் பல அளித்துள்ளார்.
அரசுப் பணியில் இருப்பதால், நான் பல கட்டுரைகளை ‘பஞ்சநதீஸ்வரன்’ என்ற பெயரில் எழுதி வந்தேன். அதை மகா பெரியவர் அறிந்துகொண்டு, ஏறத்தாழ 5 வருடங்கள் கழித்து நினைவுகூர்ந்து என் கட்டுரைகளைப் பாராட்டினார்.
இப்படி ஒவ்வொரு விஷயத்திலும் என்னை வழிகாட்டிய மகா பெரியவர், எப்போதுமே ஆத்ம ஸ்வரூபத்திலேயே இருந்தவர். என் வாழ்க்கைப் பயணத்தின் ஒவ்வொரு அடியையும் எடுத்து வைக்க வழிகாட்டியவர் இந்த நடமாடும் தெய்வம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இந்த உரையை https://www.youtube.com/watch? v=9lum9GdE3oE