Published : 25 Jan 2022 06:49 AM
Last Updated : 25 Jan 2022 06:49 AM

நீட் தேர்வில் 710 மதிப்பெண் பெற்ற நாமக்கல் மாணவி முதலிடம்: எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு

2021-22-ம் ஆண்டுக்கான எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவ படிப்பு களுக்கான தரவரிசைப் பட்டியலை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று வெளியிட்டார். உடன் துறை செயலர் ஜெ.ராதா கிருஷ்ணன், மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு, தேர்வுக்குழு செயலர் வசந்தாமணி உள்ளிட்டோர்.படம்: பு.க.பிரவீன்

சென்னை: எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. நீட் தேர்வில் 710 மதிப்பெண்கள் பெற்ற நாமக்கல் மாணவி பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.

தமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள 11 அரசு மருத்துவக்கல்லூரிகள் உட்பட மொத்தம் 37அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் இரண்டு அரசு பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ளன. அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 15 சதவீதம் இடங்கள் ஒதுக்கப்படுகிறது. அகிலஇந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு கடந்த 19-ம் தேதிதொடங்கி நடைபெற்று வருகிறது. மீதமுள்ள 85 சதவீத இடங்கள், தனியார் கல்லூரிகளில் மாநில அரசுஇடங்கள் மற்றும் தனியார் கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களை மருத்துவக் கல்வி இயக்குநரகம் (டிஎம்இ) கலந்தாய்வு நடத்தி நிரப்பி வருகிறது.

இந்நிலையில், சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவக்கல்வி இயக்குநர் அலுவலகத்தில்எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று மாலை வெளியிட்டார். அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் 24,949 பேரும், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் 14,913 பேரும் இடம் பெற்றுள்ளனர். அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள்ஒதுக்கீடு தரவரிசைப் பட்டியலில்1,806 பேர் இடம் பிடித்துள்ளனர். தரவரிசைப் பட்டியலை வெளியிட்ட பின் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது:

27-ம் தேதி கலந்தாய்வு தொடக்கம்

இளநிலை மருத்துவப் படிப்பு கலந்தாய்வு ஜன.27-ம் தேதி சிறப்பு பிரிவினருக்கும், அதற்கு அடுத்த 2நாட்கள் 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் நேரடியாக நடைபெறுகிறது. அரசு பன்னோக்கு உயர் சிறப்புமருத்துவமனையில் கலந்தாய்வு நடைபெறும். ஜன.30-ம் தேதிமுதல்முறையாக ஆன்லைனில் பொது கலந்தாய்வு தொடங்குகிறது.

அரசு மருத்துவ இடங்களைப் பொருத்தவரை மாநிலப் பாடத் திட்டத்தில் படித்த 16,309 பேர் மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பித்தனர். அதில், 16,029 பேர் தரவரிசைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். சிபிஎஸ்இ பாடத்திட்ட மாணவர்களைப் பொருத்தவரை 8,654 பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் 8,453 பேர் தரவரிசையில் இடம் பிடித்துள்ளனர். மாநில வழி பாடத்திட்டத்தின் கீழ் படித்த மாணவர்கள் அதிக அளவில் மருத்துவப் படிப்புகளில் சேரும் நோக்கில்தான் நீட் தேர்விலிருந்து விலக்கு கேட்டுள்ளோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நாமக்கல் மாணவி முதலிடம்

அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் நீட் தேர்வில் 720 மதிப்பெண்களுக்கு 710 மதிப்பெண்கள் எடுத்து அகிலஇந்திய அளவில் 23-வது இடத்தையும், தமிழகத்தில் முதலிடத்தையும் பிடித்த நாமக்கல் மாணவி எஸ்.ஏ.கீதாஞ்சலி முதலிடம் பிடித்தார். நாமக்கலைச் சேர்ந்த எம்.பிரவீண் 710 மதிப்பெண்களுடன் 2-வது இடத்தையும், சென்னை அண்ணாநகர் எஸ்.கே.பிரசன் ஜித்தன் 710 மதிப்பெண்களுடன் 3-வது இடத்தையும்பிடித்துள்ளனர். முதல் 10 இடங்களில் 7 மாணவர்களும், 3 மாணவிகளும் இடம்பெற்றுள்ளனர். 10 பேரில் முதல் 9 பேர் சிபிஎஸ்இ மாணவர்கள். 10-வது இடத்தை பிடித்த மாணவர் மாநில பாடத் திட்டத்தில் படித்தவராவார்.

நிர்வாக ஒதுக்கீட்டுக்கான தரவரிசைப் பட்டியலில் திருப்பூரைச் சேர்ந்த ஆர்.ஆர்.கவினேஷ் 710மதிப்பெண்களுடன் முதல் இடத்தையும், கேரளாவைச் சேர்ந்தஹம்டா ரஹ்மான் 701 மதிப்பெண்களுடன் 2-வது இடத்தையும், வேலூரைச் சேர்ந்த ஷெர்லி சுஷன் மேத்யூ 700 மதிப்பெண்களுடன் 3-வது இடத்தையும் பிடித்துள்ளனர். அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீடு தரவரிசை பட்டியலில் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி மாணவர் ஐ.சிவா 514 மதிப்பெண்களுடன் முதல் இடத்தையும், திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூரை சேர்ந்த எஸ்.பிரகாஷ்ராஜ் 512 மதிப்பெண்களுடன் 2-வது இடத்தையும், தருமபுரியை சேர்ந்தசி.சந்தானம் 483 மதிப்பெண்களுடன் 3-வது இடத்தையும் பிடித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x