Published : 25 Jan 2022 06:30 AM
Last Updated : 25 Jan 2022 06:30 AM

தீவிரவாத அச்சுறுத்தலால் நாடு முழுவதும் கண்காணிப்பு அதிகரிப்பு; குடியரசு தின விழா நாளை கொண்டாட்டம்: சென்னை மெரினாவில் 5 அடுக்கு பாதுகாப்பு

குடியரசு தின விழாவை முன்னிட்டு, சென்னை மெரினா காமராஜர் சாலையில் நேற்று நடைபெற்ற அணிவகுப்பு ஒத்திகையில் வீர நடையுடன் வந்த ராணுவ வீரர்கள். படம்: பு.க.பிரவீன்

புதுடெல்லி / சென்னை: நாடு முழுவதும் குடியரசு தின விழா நாளை கொண்டாடப்பட உள்ளது. தீவிரவாதிகள் அச்சுறுத்தல் காரணமாக பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை மெரினாவில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப் பட்டுள்ளது.

நாட்டின் 73-வது குடியரசு தின விழா நாளை கொண்டாடப்படுகிறது. தலைநகர் டெல்லியில் குடியரசு தின விழா அணிவகுப்பு ராஜபாதையில் தொடங்கி இந்தியா கேட் பகுதி வரை நடக்கிறது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்வார். சிறப்பாக பணியாற்றிய வீரர்களுக்கு பதக்கங்களையும் வழங்குவார். விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், முப்படை தளபதிகள், உயரதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

ஆண்டுதோறும் குடியரசு தின விழாவின்போது வெளிநாட்டு தலைவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்பது வழக்கம். இந்த ஆண்டு மத்திய ஆசிய நாடுகளான உஸ்பெகிஸ்தான், துர்க்மெனிஸ்தான், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தானை சேர்ந்த தலைவர்கள் பங்கேற்பதாக இருந்தது. கரோனா பரவல் காரணமாக அவர்களின் வருகை ரத்து செய்யப்பட்டுள்ளது.

அதேபோல, 1.25 லட்சம் பார்வையாளர்கள் குடியரசு தின அணிவகுப்பை பார்வையிடுவர். இந்த ஆண்டு பார்வையாளர்களின் எண்ணிக்கை 24 ஆயிரமாக குறைக்கப்பட்டுள்ளது. 12 மாநிலங்களின் அலங்கார ஊர்திகள், பாதுகாப்பு, மத்திய துறைகளை சேர்ந்த 9 அலங்கார ஊர்திகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 1965, 1971-ம் ஆண்டு போரில் பயன்படுத் தப்பட்ட பீரங்கிகளும், தற்போதைய அதிநவீன ஆயுதங்களும் அணிவகுப்பில் இடம்பெற உள்ளன. விமானப்படையைச் சேர்ந்த 75 விமானங்கள் பல்வேறு சாகசங்களை நிகழ்த்த உள்ளன.

குடியரசு தின விழாவை சீர்குலைக்க தீவிரவாத அமைப்புகள் சதித் திட்டம் தீட்டியிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. ஒரு வாரத்துக்கு முன்பு டெல்லி அருகே காஜி புர் சந்தையில் வெடிகுண்டுகள் கண்டு பிடிக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து டெல்லி முழுவதும் பாதுகாப்பு பலப் படுத்தப்பட்டது. இன்றுமுதல் எல்லைகள் சீல் வைக்கப்பட உள்ளன.

இதுகுறித்து டெல்லி காவல் ஆணையர் ராகேஷ் அஸ்தானா கூறும்போது, ‘‘குடியரசு தின விழா பாதுகாப்பில் 27,723 காவலர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். அவர்களுக்கு உதவியாக சிஏபிஎப் படையை சேர்ந்த 65 கம்பெனி வீரர்கள் செயல்படுவர். டெல்லியில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அணிவகுப்பு நடக்கும் ராஜ பாதை உட்பட பல்வேறு பகுதிகளில் அதிநவீன சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன’’ என்றார்.

சென்னை மெரினாவில்..

தமிழக அரசின் சார்பில் சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் உள்ள காந்தி சிலை அருகே குடியரசு தின விழா நாளை நடக்கிறது. ஆளுநர் ஆர்.என்.ரவி முதல்முறையாக தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்துகிறார். அதன்பின் முப்படையினர், கடலோர காவல்படை, முன்னாள் ராணுவத்தினர், துணை ராணுவப் படை, தமிழ்நாடு பேரிடர் நிவாரணப் படை, காவல், சிறை, தீயணைப்பு, வனத்துறை, ஊர்க்காவல் படையினர், தேசிய மாணவர் படை, கடல்சார் கழகம் உள்ளிட்ட பல்வேறு படைப்பிரிவினரின் அணிவகுப்பு மரியாதையை ஆளுநர் ஏற்கிறார்.

அதைத் தொடர்ந்து, வீரதீர செயலுக்கான அண்ணா பதக்கம், மதுவிலக்கு அமலாக்கத்துக்கான உத்தமர் காந்தியடிகள் காவலர் பதக்கம், திருந்திய நெல் சாகுபடிக்கான வேளாண்மைத்துறை சிறப்பு விருது, மத நல்லிணக்கத்துக்கான கோட்டை அமீர் விருது ஆகியவற்றை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்.

பின்னர் செய்தி, சுகாதாரம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு துறைகளின் திட்டங்களை தாங்கிய அலங்கார ஊர்தி கள் அணிவகுப்பு நடக்கும்.

ஆண்டுதோறும் குடியரசு தின விழா வில் பள்ளி, கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் இடம்பெறும். இந்த ஆண்டு கரோனா காரணமாக பள்ளி, கல்லூரி மாணவர்களின் கலைநிகழ்ச்சி கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதேபோல, பள்ளி குழந்தைகள், விடுதலைப் போராட்ட தியாகிகள் மற்றும் பொது மக்கள் பங்கேற்கவும் அனுமதி மறுக்கப் பட்டுள்ளது

பலத்த பாதுகாப்பு

குடியரசு தின விழாவை முன்னிட்டு சென்னையில் பாதுகாப்புப் பணியில் 6,800 போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ள னர். காமராஜர் சாலையில் விழா நடக்கும் பகுதியில் 5 அடுக்கு பாது காப்பு போடப்பட்டுள்ளது. மேலும், டிஜிபி சைலேந்திர பாபு அறிவுறுத்தலின் பேரில் தமிழகம் முழுவதும் பாதுகாப் பும், கண்காணிப்பும் தீவிரப்படுத் தப்பட்டுள்ளது. சென்னையில் காவல் ஆணையர் சங்கர் ஜிவால் மேற்பார்வை யில் கூடுதல் ஆணையர்கள் செந்தில் குமார், கண்ணன் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விழா முடியும் வரை மெரினா உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x