Published : 25 Jan 2022 08:57 AM
Last Updated : 25 Jan 2022 08:57 AM

விருதுநகரைச் சேர்ந்த 8 வயது சிறுமிக்கு ராஷ்ட்ரிய பால புரஸ்கார் விருது: காணொலி மூலம் பிரதமர் மோடி வழங்கினார்

விஷாலினி

விருதுநகர்: புதிய கண்டுபிடிப்புக்காக பிரதம மந்திரி ராஷ்டிரிய பால புரஸ்கார் விருதை, விருதுநகரைச் சேர்ந்த 8 வயது சிறுமிக்கு காணொலி மூலம் பிரதமர் மோடி வழங்கி கவுரவித்தார்.

2021 மற்றும் 2022-ம் ஆண்டுக்கான பிரதம மந்திரி ராஷ்டிரிய பால புரஸ்கார் விருது வழங்கும் விழா காணொலி மூலம் நேற்று நடைபெற்றது. புத்தாக்கம், சமூக சேவை, கல்வி, விளையாட்டு, கலை, கலாச்சாரம், வீரம் உள்ளிட்டபிரிவுகளின்கீழ் சிறப்பான சாதனை புரிந்த 15 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு இவ்விருதுகள் அறிவிக்கப்பட்டன.

பிரதம மந்திரி ராஷ்டிரிய பால புரஸ்கார் விருதுக்காக நாடு முழுவதும் 29 சிறுவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களில் விருதுநகரைச் சேர்ந்த 8 வயது சிறுமி விஷாலினியும் ஒருவர்.

பலூன் வீடு

விருதுநகர் லட்சுமி நகரைச் சேர்ந்த மருத்துவர்கள் நரேஷ்குமார், சித்திர கலா ஆகியோரது மகள் விசாலினி(8). இவர் ஹைதராபாத்தில் உள்ள தனியார் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர், தனது 6 வயதில் இந்தியாவில் ஏற்பட்ட வெள்ளச் சேதங்களை டி.வி.யில் பார்த்தார். அப்போது வெள்ளப் பாதிப்பில் இருந்து மக்களையும், அவர்களது உடைமைகளையும் பாதுகாக்கும் வகையில் ஒரு பலூன் வீட்டை உருவாக்கினார்.

அதற்கு ‘ஒரு தானியங்கி பல செயல்பாட்டு வாழ்க்கை மீட்பு வெள்ளம் வீடு' என்ற தலைப்பில் கண்டுபிடிப்பு காப்புரிமை கோரி 2020 செப்டம்பர் 23-ம் தேதி இந்திய காப்புரிமை அலுவலகத்தில் விண்ணப்பித்தார். அதை ஏற்று மத்திய அரசு இவருக்கு 2021 மே 10-ம் தேதி காப்புரிமை வழங்கியது. இது 2020 செப்டம்பர் 23 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

இந்த வகையான வீடுகள் கடல் பகுதிக்கு அருகில் வசிக்கும் மீனவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இவரின் இந்த சாதனை, இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் 2022-ன் கீழ் 'இளைய காப்புரிமை வைத்திருப்பவர்' என்ற தலைப்பின் கீழ் அங்கீகாரம் பெற்றுள்ளது.

இவரது திறமையையும், ஆர்வத்தையும் பாராட்டி ஊக்குவிக்கும் விதமாக மத்திய அரசால் 'ராஷ்டிரிய பால புரஸ்கார் விருது' அறிவிக்கப்பட்டது.

இந்திய சாதனை பதிவேடுகள் புத்தகத்தில் நாட்டிலேயே 6 வயதில் காப்புரிமை பெற்ற ஒரே சிறுமி விஷாலினி என்றும், மேலும் சர்வதேச அளவில் இளம் வயதில் காப்புரிமை பெற்றவரில் இவர் 2-வது நபர் எனவும் அதில் குறிப்பிட்டுள்ளனர். மேலும் ஒரு லட்ச ரூபாய் ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக காணொலி அரங்கத்தில் ஆட்சியர் மேகநாதரெட்டி தலைமையில் நடந்த நிகழ்ச்சியில், காணொலி மூலம் பிரதமர் நரேந்திர மோடி சிறுமி விஷாலினிக்கு விருது வழங்கி வாழ்த்தினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x