

சென்னை: வடபழனி முருகன் கோயிலில் கும்பாபிஷேகத்தை தொடர்ந்து மண்டலாபிஷேகம் தொடங்கிய நிலையில், பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. ஏராளமானோர் பல மணி நேரம் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.
சென்னை வடபழனி முருகன் கோயிலில் 14 ஆண்டுகளுக்கு பிறகு 23-ம் தேதி கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, இதில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. முழு ஊரடங்கு அமலில் இருந்த சூழலிலும், ஏராளமான பக்தர்கள் கோயிலை சுற்றியுள்ள தெருக்களில் நின்று, கும்பாபிஷேகத்தை தரிசித்தனர்.
இந்நிலையில், அடுத்த 48 நாட்கள் நடக்க உள்ள மண்டலாபிஷேக பூஜைகள் நேற்று தொடங்கின. பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கும் அனுமதி அளிக்கப்பட்டது. இதற்காக கட்டைகள் கட்டப்பட்டு, இலவச தரிசன வரிசை ஏற்படுத்தப்பட்டிருந்தது. நேற்று அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வந்தபடி இருந்தனர். நேரம் செல்ல செல்ல கூட்டம் அதிகரித்தது
அனைவரும் முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றுமாறு, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் தொடர்ந்து ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தினர். பக்தர்களின் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டு, சானிடைசரால் கைகளை சுத்தம் செய்த பிறகு கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். பக்தர்கள் பல மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். கோயிலில் நேற்று நாள் முழுவதும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
தமிழிசை தரிசனம்
வடபழனி முருகன் கோயிலில் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று காலை 9.20 மணி அளவில் குடும்பத்தினருடன் வந்து சுவாமி தரிசனம் செய்தார். அப்போது, செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
வடபழனி ஆண்டவர் கோயிலில் மிக குறைவான எண்ணிக்கையில் கோயில் நிர்வாகத்தினர் பங்கேற்ற கும்பாபிஷேக விழா நடைபெற்றது. மக்களுடன் சேர்ந்து தரிசனம் செய்ய வேண்டும் என்பதால் இன்று வந்தேன். கரோனா, ஒமைக்ரான் பாதிப்பு சமூக பரவலாக மாறி வருவதாக கூறுகின்றனர். எனவே, பொதுமக்கள் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.
முருகன் வேல்கொண்டு சூரனை வதம் செய்ததுபோல, நாம் தடுப்பூசி கொண்டு கரோனாவை வதம் செய்ய வேண்டும். இந்தியாவில் தடுப்பூசி செலுத்துவது மாபெரும் இயக்கமாக மாறியுள்ளது. இந்தியாவில் இதுவரை 160 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
டெல்லி குடியரசு தின விழாவில் தமிழக ஊர்தி இடம்பெறாதது குறித்து கேட்கிறீர்கள். இந்த விஷயத்தை அரசியலாக்க வேண்டாம். குடியரசு தினத்தை கருத்து வேறுபாடு இன்றி மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.