

சென்னை: தமிழகத்தில் குற்றச் செயலில் ஈடுபடுவோரை தொடக்க நிலையிலேயே கண்டறிந்து கலைந்தெறிய வேண்டும் என்று தமிழக டிஜிபி சைலேந்திரபாபுவிடம், வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக டிஜிபி சைலேந்திரபாபுவிடம் ஏ.எம்விக்கிரமராஜா அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் சமூக விரோத செயல்கள், ரவுடிகளின் தாக்குதல்கள் மீண்டும் தலைதூக்கும் அவலம் ஆங்காங்கே அரங்கேறி வருகிறது. இது வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக கடந்த 5 மாதங்களாக செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் வணிகர்களுக்கு எதிரான ரவுடிகளின் வன்முறைகள் அதிகரித்துள்ளன.
கடந்த 20-ம் தேதி மாமண்டூரில் தர்மாராம் எனற நடை அடகுக்கடை வியாபாரியை பட்டப்பகலில் ரவுடி ஒருவர் வெட்டியதால் உயிருக்கு ஆபத்தான நிலையில், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதற்கான காரணங்களை ஆராய்ந்து பார்த்தால், குற்ற நிகழ்வுகளை முறையாக பதிவு செய்து, சமூக விரோதிகள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்காமல் காலதாமதம் செய்வது காரணமாகவும், விரைவாக தண்டனை பெற்றுத் தராததுமே குற்றவாளிகள் மேலும் மேலும் குற்றங்களை செய்வதற்கு துணிவையும், தூண்டுதலையும் அளிக்கிறது.
காஞ்சிபுரத்தை சேர்ந்த 64 குற்ற வழங்குகளுக்கும் மேல் தொடர்புடைய ரவுடியை வட மாநிலத்தில் கைது செய்திருக்கும் நிகழ்வு, இதை உறுதிப்படுத்துகிறது. அவரை தண்டனைக்கு உள்ளாக்காமல் விட்டு வைத்தது யார் என்ற கேள்வி எழுகிறது. எனவே, பொதுமக்களுக்கும் வணிகர்களுக்கும் எதிரான குற்றச்செயல்களில் ஈடுபடும் சமூக விரோதிகள் மற்றும் ரவுடிகளை தொடக்கத்திலேயே கலைந்தெறியும் நடவடிக்கையில் இறங்கி, விரைந்து வழக்குப்பதிவு செய்து, தண்டனை பெற்றுத்தருவதை காவல்துறை உறுதி செய்தால் மட்டுமே இதுபோன்ற சம்பங்களை தொடராமல் தடுக்க முடியும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.