

சென்னை: விவசாய சங்க ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியனுக்கு கொலை மிரட்டல் வந்துள்ளதாக டிஜிபியிடம் புகார் கூறப்பட்டுள்ளது.
டிஜிபி சைலேந்திர பாபுவிடம் தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் சென்னை மண்டல செயலாளர் ப.சிவக்குமார் நேற்று ஒரு புகார் கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:
காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டுவில் அணை கட்டுவதற்கான முயற்சியை கர்நாடக அரசு எடுத்து வருகிறது. இதற்கு அனுமதிக்க கூடாது என்று தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவின் மாநிலத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் கடந்த 18-ம் தேதி போராட்டம் நடத்தப்பட்டது.
அதைத் தொடர்ந்து, சில நபர்களின் தூண்டுதலால், பெயர் தெரியாத நபர் ஒருவர் வாட்ஸ்அப் உள்ளிட்ட வலைதளங்கள் மூலம் பி.ஆர்.பாண்டியனை விமர்சித்து வருகிறார். அவரது புகழ், நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக அவதூறு பரப்பியும், அவரை புண்படுத்தும் விதமாகவும் பேசி வருகிறார். ‘நீ அணிந்துள்ள பச்சை துண்டு, சிவப்பு நிறமாக மாறிவிடும். உன்னை கொன்றுவிடுவேன்’ என்றும் மிரட்டியுள்ளார்.
அந்த நபராலும், அவரை தூண்டிவிடுபவர்களாலும் பி.ஆர்.பாண்டியனின் உயிருக்கு ஆபத்து நேரிட வாய்ப்பு உள்ளதால், அவருக்கு தகுந்த பாதுகாப்பு அளித்து, மிரட்டல் விடுத்த நபர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.