Published : 25 Jan 2022 08:14 AM
Last Updated : 25 Jan 2022 08:14 AM

அறிவியல் இயக்க மூத்த தலைவர் சோ.சுத்தானந்தம் மறைவு

சென்னை: தமிழ்நாடு அறிவியல் இயக்க மூத்த தலைவர்களுள் ஒருவரான சோ.சுத்தானந்தம் சென்னை தாம்பரத்தில் நேற்று காலமானார். அவருக்கு வயது 74.

ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர் சோ.சுத்தானந்தம். பொறியாளரான இவர் சமூகப் பணிகளில் அதிக ஈடுபாடு கொண்டவர். இவர்,1980-ம் ஆண்டுகளின் இறுதியில் டெல்டா மாவட்டங்களில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் உருவாக்கத்தில் முக்கிய பங்காற்றிய மூத்த தலைவர்களில் ஒருவர்.

தமிழ்நாட்டில் அறிவொளி இயக்கம் அமைக்கும் காலத்தில் அதன் வளர்ச்சியில் முழுமையாக பங்கெடுத்துக்கொண்டவர். சிஐடியூ தொழிற்சங்க பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டார்.

எல்ஐசி முகவரான இவர், அகில இந்திய எல்ஐசி முகவர்கள் சங்கத்தின் (லிகாய்) தமிழ்நாடு பிரிவை உருவாக்கி, அதன் முதல் மாநிலப் பொதுச் செயலாளர், மாநிலத் தலைவராக இருந்தவர். தீவிர வாசிப்பு கொண்ட இவர், தன் வாழ்க்கையை 'பயணங்கள் முடிவதில்லை' என்ற நூலாக எழுதியிருக்கிறார்.

கடந்த சில மாதங்களாக இவர் உடல் நலிவுற்று இருந்தார். இந்நிலையில் சென்னை தாம்பரத்தில் உள்ள தனது வீட்டில் நேற்று காலமானார். இவரது மனைவி விஜயலட்சுமி. இவர்களுக்கு இந்து தமிழ் திசை நாளிதழில் உதவி செய்தி ஆசிரியராக பணிபுரியும் சுஜாதா உள்ளிட்ட 4 மகள்கள் உள்ளனர். சோ.சுத்தானந்தத்தின் உடல் அரசு சென்னை மருத்துவக் கல்லூரிக்கு நேற்று தானமாக வழங்கப்பட்டது.

கே.பாலகிருஷ்ணன் இரங்கல்

இவரது மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில், கூறியிருப்பதாவது: சோ.சுத்தானந்தம் உயிரிழந்தார் என்ற செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது. கட்சியின் பிரசுரங்கள் மற்றும் வெளியீடுகளை விநியோகம் செய்யும் பொறுப்பை ஏற்றதோடு, பாரதி புத்தகாலயத்தின் விற்பனை கிளையை தஞ்சாவூரில் தொடங்கியதில் இவருக்கு முக்கிய பங்குண்டு. அவரை இழந்துவாடும் அவரது மனைவி, மகள்கள் மற்றும் குடும்பத்தினருக்கும் கட்சியின் மாநில செயற்குழு ஆறுதலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் பொதுச்செயலர் எஸ்.சுப்பிரமணி வெளியிட்ட இரங்கல் அறிக்கையில், "தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தை தொடங்கியபோது, அமைப்பை முன்னெடுத்துச் சென்றவர் சோ.சுத்தானந்தம். அவர் இயக்கத்தின் மாநில பொருளாளராகவும் இருந்துள்ளார். அவரது மறைவு அறிவியல் இயக்கத்துக்கு பேரிழப்பாகும்" என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x