Published : 23 Apr 2016 07:24 AM
Last Updated : 23 Apr 2016 07:24 AM

தமிழகம் முழுவதும் மனுத்தாக்கல் தொடங்கியது: 82 பேர் வேட்புமனு தாக்கல் - இன்னும் ஐந்து நாட்கள் அவகாசம்

தமிழக சட்டப்பேரவை பொதுத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது. முதல் நாளான நேற்று தமிழகம் முழுவதும் 7 பெண்கள் உட்பட 82 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டப் பேரவை பொதுத் தேர்தல் அட்டவ ணையை டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் நசீம் ஜைதி கடந்த மார்ச் 4-ம் தேதி வெளியிட்டார். தமிழகம், புதுச்சேரி, கேரளாவில் ஒரே கட்டமாக மே 16-ம் தேதி வாக்குப்பதிவு நடக்கும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், சட்டப் பேரவை பொதுத் தேர்தல் வாக்குப்பதிவு குறித்த அறிவிக்கையை தேர்தல் ஆணையம் நேற்று முறைப் படி வெளியிட்டது. தேர்தல் அறிவிக்கை வெளியா னதைத் தொடர்ந்து, வேட்பு மனு தாக்கலும் நேற்றே தொடங்கியது.

காலை 11 மணி முதல் மனுக்களை பெற, தேர்தல் நடத்தும் அதிகாரிகள், தொகுதிகளில் அவர்களுக்கு ஒதுக்கப் பட்ட அலுவலகங்களில் காத்திருந் தனர். நேற்று மாலை 3 மணி வரை மனுக்கள் பெறப்பட்டன. இதில், எடப்பாடி, சூலூர், புவனகிரி, மன்னார்குடி, பத்மநாபபுரம் உள்ளிட்ட தொகுதிகளில் 7 பெண்கள் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

முதல்வர் ஜெயலலிதா போட்டியிடும் ஆர்.கே.நகர் தொகுதி உட்பட 5 தொகுதிகளில் தலா 3 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர். ஆர்.கே.நகரில் ஆபிரகாம் ராஜ்மோகன் (மதச்சார்பற்ற இந்திய மக்கள் கட்சி), ரவி பறையனார் (இந்திய குடியரசுக்கட்சி (ஏ), சடையாண்டி (சோஷலிஸ்ட் யூனிட்டி சென்டர் ஆப் இந்தியா- கம்யூனிஸ்ட்) ஆகிய 3 பேர் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர். அம்பத்தூர் உட்பட 6 தொகுதிகளில் தலா 2 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

திமுக தலைவர் கருணாநிதி போட்டியிடும் திருவாரூர், பொருளாளர் மு.க.ஸ்டாலின் போட்டியிடும் கொளத் தூர், பாமக முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் போட்டியிடும் பென்னாகரம், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ போட்டியிடும் கோவில்பட்டி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் போட்டி யிடும் காட்டுமன்னார்கோவில் ஆகிய தொகுதிகளில் யாரும் மனுத்தாக்கல் செய்யவில்லை. தேமுதிக தலைவர் விஜயகாந்த் போட்டியிடும் உளுந்தூர் பேட்டையில் ஒருவர் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அதிமுகவைப் பொறுத்தவரை முதல்வர் ஜெயலலிதா அறிவிக்கும் நாளில் 234 தொகுதிகளிலும் வேட்பா ளர்கள் மனுத்தாக்கல் செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், அவர்கள் யாரும் நேற்று மனுத்தாக்கல் செய்ய வில்லை. பாளையங்கோட்டை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் மைதீன்கான் நேற்று மனுத்தாக்கல் செய்தார்.

முதல் நாளான நேற்று தமிழகம் முழுவதும் 7 பெண்கள் உட்பட 82 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர். தமிழகம் முழுவதும் தாக்கல் செய்யப்பட்டுள்ள வேட்பு மனுக்கள் குறித்த விவரங்கள், தேர்தல் துறையின் இணைய தளத்தில் வெளியிடப்பட்டன.

வேட்புமனு தாக்கல் செய் வதற்கான அவகாசம் 29-ம் தேதியுடன் முடிகிறது. அதுவரை மனுக்களை காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை தாக்கல் செய்யலாம். இன்றும், நாளையும் அரசு விடுமுறை என்பதால், வேட்புமனு தாக்கல் செய்ய முடியாது. நாளை மறுதினம் 25-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை மனுதாக்கல் செய்யலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x