Published : 25 Jan 2022 08:23 AM
Last Updated : 25 Jan 2022 08:23 AM

சிறுமியின் காதில் சிக்கிய கம்பியை அகற்றிய காது மூக்கு தொண்டை மருத்துவர்

அவரின் காதில் சிக்கிய இரும்பு கம்பி

குரோம்பேட்டை: குரோம்பேட்டை அருகே நெமிலிச்சேரியை சேர்ந்த 4 வயது சிறுமி தேஷிதா. சில தினங்களுக்கு முன்பு வீட்டில் விளையாடும் போது, சுருள் இரும்பு கம்பியை இடது காதில் விட்டுள்ளார். காதில் கம்பி சிக்கிக் குத்தியதால் ரத்தம் வந்துள்ளது. வலியால் துடித்த சிறுமி குரோம்பேட்டை அஸ்தினாபுரத்தில் உள்ள தனியார் கிளினிக்கில் அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்த செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரியின் காது மூக்கு தொண்டை பிரிவின் துணைப் பேராசிரியராக பணியாற்றும் மருத்துவர் வி.நரேந்திரகுமார் சிறுமியின் காதிலிருந்த கம்பியை அகற்றினார். தற்போது சிறுமி நலமுடன் உள்ளார்.

இது தொடர்பாக மருத்துவர் வி.நரேந்திரகுமார் கூறியதாவது: சிறுமிக்கு மயக்க மருந்து எதுவும் செலுத்தாமல் கம்பி எவ்வாறு காதுக்குள் செலுத்தப்பட்டதோ அதேபோல் கம்பியைத் திருகித் திருகி வெளியே எடுக்கப்பட்டது. ஊக்கு, ஹேர் பின், தீக்குச்சி, பென்சில், பட்ஸ், பைக் சாவி என எது கையில் கிடைத்தாலும், அதைக் காதுக்குள் விட்டு குடையும் பழக்கம் பலரிடம் உள்ளது. காதில்அழுக்கை நீக்குவதுதான் சுகாதாரம் என்றுநினைப்பதும், காது குடையும்போது சுகமாக இருப்பதும்தான் இதற்கு முக்கிய காரணம் ஆகும். இது தவறான பழக்கம். கரோனா தொற்று காலம் என்பதால் பள்ளிக்குச் செல்லாமல் வீட்டிலேயே முடங்கி வீட்டில் கிடைக்கும் பொருட்களை வைத்து சிறுவர், சிறுமிகள் விளையாடி வருகின்றனர்.

சிறுமி தேஷிதா

குழந்தைகளைப் பெற்றோர் சரியாகக் கவனிப்பதில்லை. இதனால் தான் குழந்தைகள் கைகளில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு விளையாடி வருகின்றனர்.

காது, மூக்கு, வாய்உள்ளிட்ட பகுதிகளில்ஏதேனும் பொருட்களைவைத்து விளையாடுகின்றனர். இதனால் பொருட்கள் சிக்கிக் கொள்கின்றன. குழந்தைகளைப் பெற்றோர் முறையாகக் கண்காணிக்க வேண்டும்.அவர்களுடன் நேரத்தைக் கழிக்க வேண்டும்.

சிறு பொருட்கள் சிக்கினால் மூளை, கண்பார்வைபாதிக்கப்படும் ஆபத்தும் உள்ளது. கம்பி, ஹேர்பின், ஊக்கு, குண்டூசி, கொட்டைகள், பருப்பு, கடலை ஆகியவற்றைக் கொண்டு குழந்தைகள் விளையாடாமல் பெற்றோர் பார்த்துக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x