Published : 25 Jan 2022 08:26 AM
Last Updated : 25 Jan 2022 08:26 AM

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்காக அதிமுகவில் வேட்பாளர்கள் தேர்வு தீவிரம்: ஓபிஎஸ் உள்ளிட்டோர் அந்தந்த மாவட்டங்களில் நேர்காணல்

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், அதிமுகவில் உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வு தீவிரமடைந்துள்ளது.

ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் அந்தந்த மாவட்டங்களில் விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடத்தி வருகின்றனர்.

தமிழகத்தில், உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலான ஊரக உள்ளாட்சிகளை ஆளுங்கட்சியான திமுக கைப்பற்றியுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. சமீபத்தில் இது தொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்தை மாநில தேர்தல் ஆணையம் நடத்தியது. அப்போது, ஒரே கட்டமாக தேர்தலை நடத்த திமுக, அதிமுக உள்ளிட்ட பெரும்பான்மை கட்சிகள் தெரிவித்துள்ளன. இதையடுத்து, விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது.

இதற்கிடையே, மாநகராட்சிகளின் மேயர், நகராட்சிகள், பேரூராட்சிகளின் தலைவர்களுக்கான இட ஒதுக்கீட்டின் அடிப்படையில், அதற்கான பட்டியலும் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. இப்பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் என்பதால், தற்போது வேட்பாளர்கள் தேர்வில் அனைத்து கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன. ஆளுங்கட்சியான திமுக சார்பில் மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட செயலாளர்கள் தற்போது நேர்காணல் நடத்தி பட்டியல் தயாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், அதிமுக சார்பில் புதிதாக அறிவிக்கப்பட்ட மாநகராட்சிகள், நகராட்சிகளுக்கான வார்டு உறுப்பினர் பதவிக்கான விருப்ப மனுக்களை அளிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஏற்கெனவே உள்ள நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு அந்தந்த மாவட்டத்தில் விருப்ப மனுக்களை மாவட்ட செயலாளர்கள் பெற்றுள்ளனர். இந்நிலையில், தற்போது ஆயிரத்துக்கும் மேற்பட்ட விருப்ப மனுக்கள் சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் பெறப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இவற்றில் உரிய தகுதியான விருப்ப மனுக்களைத் தேர்வு செய்து, நேர்காணல் நடத்தும் பணியில் அனைத்து மாவட்ட செயலாளர்களும் ஈடுபட்டுள்ளனர். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தேனியிலும், சேலத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் அமைச்சர்கள் தங்கள் மாவட்டங்களிலும் தற்போது நேர்காணல் நடத்தி வருகின்றனர். இதுதவிர, மாவட்ட செயலாளர்கள் தற்போது தகுதி அடிப்படையில், வேட்பாளர்கள் தேர்வை நடத்தி வருகின்றனர். தற்போது ஒரு வார்டு உறுப்பினர் பதவிக்கு இரண்டு வேட்பாளர்களை இறுதியாகத் தேர்வு செய்து, அதில் ஒருவரை தலைமை ஒப்புதலுடன் வேட்பாளராக நிறுத்த முடிவெடுத்து அதன்படி தேர்வு நடைபெற்று வருகிறது.

இம்முறை நகர்ப்புற உள்ளாட்சிகளின் பதவிகளில் 50 சதவீதம் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால், தகுதியான பெண் வேட்பாளரை தேர்வு செய்வது அரசியல் கட்சிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆண் வார்டு உறுப்பினர்களாக இருந்தவர்களின் மனைவி, சகோதரிகள் என அப்பகுதியில் பிரபலமானவர்களை அனைத்து கட்சிகளும் தேடி வருகின்றன. அதிமுகவும் இதில் விதிவிலக்கல்ல. இருப்பினும் விரைவில் பட்டியல் தயாராகி விடும் என அதிமுக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

இதற்கிடையே, விரைவில் பாஜக, தமாகா உள்ளிட்ட கூட்டணி கட்சிகளிடமும் பேச்சுவார்த்தை நடத்த அதிமுக திட்டமிட்டுள்ளது. கடைசி நேரத்தில் ஏற்படும் குழப்பத்தை தவிர்க்க, முன்கூட்டியே இடங்களை முடிவு செய்வதில் அதிமுக முனைப்பு காட்டி வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x