

கிருஷ்ணா நகரில் வடிகால் வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை அகற்ற அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களுக்கு 15 நாட்கள் இறுதி அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் ஆண்டுதோறும் மழைக் காலங்களில் வெள்ளநீர் தேங்கி கிருஷ்ணா நகர், ரெயின்போ நகர் பகுதிகள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றன. இதனால் வாய்க்கால்களில் ஏதேனும் ஆக்கிரமிப்பு உள்ளதா என பொதுப்பணித்துறை அதிகாரி கள் ஆய்வு செய்தபோது, கிருஷ்ணாநகர் 14-வது குறுக்குத் தெருவில் வடிகால் வாய்க்கால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. அதையடுத்து வாய்க்காலை ஆக்கிரமித்து வீடு கட்டியதாக மூவரின் கட்டுமான ஆக்கிரமிப்பை அகற்றவும், வாய்க்காலில் ஆக்கிரமித்து கட்டியுள்ள இடத்தை அகற்றக் கோரியும் நீதிமன்ற ஆணையை பெற்று கடிதம் அளிக்கப்பட்டது.
இந்நிலையில் சம்பந்தப்பட்ட இடத்தை காலி செய்ய நீதிமன்றம் மூலம் நோட்டீஸ் அனுப்பி நேற்று அங்கு ஆக்கிரமிப்பை அகற்றச் சென்றனர். ஆனால் அங்கிருந்தோர் அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தனர். இதையடுத்து எஸ்பி சுபம் கோஷ் மற்றும் போலீஸார் அங்கு வந்தனர். அப்போது எஸ்பி அவர்களிடம், “நீதிமன்ற உத்தரவுப்படி இடத்தை காலி செய்ய வந்துள்ளோம். இதை தடுப்பது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல். ஒத்துழைப்பு தாருங்கள்” என்று குறிப்பிட்டார்.
இதற்கிடையில் அங்கிருந்தோர் தற்கொலை மிரட்டல் விடத் தொடங்கினர். அதன் பின்னர் அங்கிருந்தோர் பேச்சுவார்த்தைக்கு வந்தனர். வீடு மாற்றவும், இடத்தை காலி செய்யவும் 15 நாட்கள் அவகாசம் கேட்டனர். இதையடுத்து பொதுப்பணித்துறை அதிகாரிகள், இறுதி வாய்ப்பாக 15 நாட்கள் அவகாசம் அளித்துள்ளனர்.
அதற்குள் தாங்களாகவே ஆக்கிரமிப்பை அகற்றிவிட வேண்டும். இல்லாவிட்டால் வரும் பிப். 9-ம் தேதி இவ்விடத்தை காலி செய்து ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் பொதுப்பணித்துறை ஈடுபட உள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.