Last Updated : 20 Apr, 2016 08:50 AM

 

Published : 20 Apr 2016 08:50 AM
Last Updated : 20 Apr 2016 08:50 AM

புதுச்சேரியில் ஆறுமுனைப் போட்டி: கூட்டணி இழுபறியால் பிரச்சாரம் சூடு பிடிக்கவில்லை

புதுச்சேரியில் ஆறுமுனை போட்டி வர வாய்ப்பு அதிகரித்துள்ளது. தமிழகத்தில் பிரச்சாரம் மும்முரமாக நடக்கும் நேரத்தில் புதுச்சேரியில் கூட்டணி இழுபறியால் முக்கியக் கட்சிகள் பிரச்சாரத்தை தொடங்க வில்லை.

கடந்தமுறை என்.ஆர்.காங்கிரஸுடன் கூட்டணி அமைத்த அதிமுக இம்முறை 30 தொகுதிகளிலும் வேட்பாளர்களை முதலில் அறிவித்துள்ளது. பல தொகுதிகளில் தொகுதி கூட்டங்கள் நடத்துகின்றனர். ஆனால், வேட்பாளர்களில் பலர் இன்னும் வாக்கு சேகரிப்பில் மும்முரமாக ஈடுபடவில்லை. பலரும் வேட்பு மனுதாக்கல் செய்த பிறகு பிரச்சாரத்தை முழு வீச்சில் தொடங்குவோம் என்றே குறிப்பிடுகின்றனர்.

புதுச்சேரியில் ஆளும் கட்சியான என்.ஆர்.காங்கிரஸ் இதுவரை தேர்தல் பணியை தொடங்கவில்லை. ரங்கசாமி தொடர்ந்து மவுனமாகவே உள்ளார். மேலும் ஆன்மிக யாத்திரையில் உள்ளார்.

தமிழகத்தைப் போன்றே புதுச்சேரியில் காங்கிரஸ்-திமுக கூட்டணி அமைத்து, காங்கிரஸ் 21 தொகுதிகளிலும், திமுக 9 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. ஆனால், எந்தெந்த தொகுதிகளில் போட்டி என்பதை இரு கட்சிகளும் முடிவு செய்வதில் சிக்கல் நிலவுகிறது.

அதேபோல் மக்கள் நலக் கூட்டணியிலும் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் சிபிஎம் 4 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் 8 இடங்களிலும், விடுதலைச்சிறுத்தைகள் 7 இடங்களிலும் மதிமுக, தேமுதிக தலா 4 தொகுதிகளிலும், புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி 1 தொகுதியிலும் போட்டியிடுகின்றன. மாஹே, ஏனாமில் சுயேட்சை வேட்பாளர்களை ஆதரிக்கின்றனர். இதில் தேமுதிக 4 தொகுதி போதாது எனவும், விரும்பிய தொகுதிகளை ஒதுக்கவில்லை என்று கூறியதால் சிக்கல் நிலவுகிறது.

என்.ஆர்.காங்கிரஸுடன் கூட்டணி அமைக்க காத்திருந்தும் ரங்கசாமியின் நீடித்த மவுனத்தால் 16 வேட்பாளர்கள் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. பாமகவும் 30 தொகுதிகளுக்கு வேட்பாளர் பட்டியலை தயார் செய்துள்ளது. என்.ஆர்.காங்கிரஸுடன் கூட்டணி வருமா என காத்துள்ளது. இதனால் புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ், என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக, மக்கள் நலக்கூட்டணி, பாஜக, பாமக என ஆறுமுனை போட்டி வர வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் பிரசாரத்தில் முக்கிய கட்சிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ள நிலையில் கூட்டணி இழுபறியால் புதுச்சேரியில் தேர்தல் பிரசாரத்தை பலரும் தொடங்காத சூழலே நிலவுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x