

மதுரையில் 4 இடங்களில் மேம் பாலங்கள் அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஆனால் போக்குவரத்து நெரிசல் மிகுந்த கோரிப்பாளையத்தில் மேம்பாலம் அமைக்காமல், நகருக்குள் எத்தனை பாலங்கள் அமைத்தும் என்ன பயன் ஏற்படப் போகிறது எனப் பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் ஆதங்கப்படுகின்றனர்.
மதுரை கோரிப்பாளையம் சந்திப்பில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும் போக்குவரத்து நெரிசலால் வாகனங்கள் கடந்துசெல்ல முடியாத அளவுக்கு போக்குவரத்து முடங்கி விடுகிறது.
இதற்குத் தீர்வு காணும் வகையில் ஜெயலலிதா முதல்வராக இருந்த போது சட்டப்பேரவையில் காளவாசல், கோரிப்பாளையத்தில் மேம்பாலம் அமைக்கப்படும் என அறிவித்தார். அதன் பிறகு இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது.
அதிமுக ஆட்சியின் தொடக்கத்தில் பாலம் அமைக்க முயற்சி நடந்தபோது நிலங்களைக் கையகப்படுத்துவதில் சில பிரச்சினைகள் எழுந்தன. சில தனியார் நிறுவனங்களுக்கு ஆதரவாக அதிமுக முக்கியப் புள்ளிகள் செயல்பட்டதால் அதிகாரிகளால் திட்டத்தை முன் னெடுக்க முடியவில்லை.
திமுக ஆட்சியிலாவது கோரிப் பாளையம் முதல் பெரியார் பஸ் நிலையம் வரையிலான நெரிசலுக்குத் தீர்வு காண மேம்பாலம் அமைக்கப்படும் என மதுரை மக்கள் எதிர்பார்த்தனர். இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் மதுரைக்கான வளர்ச்சித் திட்டங்களை சென்னையில் இருந்து காணொலி மூலம் கடந்த வாரம் தொடங்கி வைத்தார். அப்போது மதுரை ஆட்சியர் அலுவலகச் சந்திப்பு, விரகனூர் சந்திப்பு, அப்போலோ மருத்துவமனை சந்திப்பு, மண்டேலா நகர் சந்திப்பு ஆகிய 4 இடங்களில் மேம்பாலம் கட்டப்படும் என அறிவித்தார்.
கோரிப்பாளையத்தில் மேம்பாலம் அமைக்கப்படும் என முதல்வர் அறிவிக் காதது ஏன் எனத் தெரியவில்லை. நிலம் கையகப்படுத்துவதில் அதிமுக அரசை போல திமுகவும் பின்வாங்குகிறதோ என்று மக்கள் சந்தேகிக்கின்றனர். இதன்மூலம் கோரிப்பாளையம் போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வு காண அரசு அலட்சியம் காட்டுவதாக பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் ஆதங்கப்படுகின்றனர்.
கோரிப்பாளையம் பகுதியில் தினமும் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் ஆயிரக்கணக்கான உள்ளூர், வெளியூர் நோயாளிகள் சிகிச்சைக்காக வரும் அரசு ராஜாஜி மருத்துவ மனையின் செயல்பாட்டை முடக்கி போட்டுள்ளது. இதுதவிர, பல்வேறு கல்லூரிகள், தனியார் நிறுவனங்கள், ஹோட்டல்கள், வர்த்தக நிறுவனங்கள் இப்பகுதியில் அமைந்துள்ளன. ஆனால், இப்பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டியதன் அவசியத்தை உள்ளூர் அமைச்சர்கள் முதல்வரின் கவனத்துக்குக்கொண்டு செல்ல மறந்துவிட்டார்களா? என்று மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.