

விவசாயிகளுக்காக போராட யாரும் இல்லை என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார்.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதியில் மதிமுக வேட்பாளர் கலையரசனை ஆதரித்து வேலாயுதம்பாளையம் ரவுண்டானா பகுதியில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேற்று பேசியதாவது:
அமராவதிக்கு ஆபத்து வந்தபோது ஊர் ஊராகச் சென்று மக்களை திரட்டி 80 லட்சம் மக்களின் குடிநீருக்கு ஆபத்து வருகிறது என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினேன். தொடர்ந்து மீத்தேன் திட்டத்தை எதிர்த்துப் போராடியபோதும், முல்லை பெரியாறு அணை விவாகாரத்தில் போராடியபோதும் ஒன்றை உணர்ந்தேன். விவசாயிகளை அரசியல் கட்சிகள் பயன்படுத்திக் கொள்கின்றன. ஆனால், இந்தியாவில் நாதியற்ற மக்களாக இருப்பவர்கள் விவசாயிகள் மட்டும்தான்.
வியாபாரிகளுக்கு போராட வெள்ளையன் உள்ளார். நெசவாளர்களின் உரிமைகளை வென்றெடுக்க போராட்டம் நடத்துகின்றனர். ஆனால், விவசாயிகளுக்காகப் போராட யாரும் இல்லை. இந்த விவசாயிகள் நாதிகளற்றவர்களாக மீண்டும் மாறிவிடக்கூடாது என்பதற்காகவும், அவர்களின் நலனுக்காகவும்தான் மக்கள் நலக் கூட்டணியை அமைத்துள்ளோம்.
தேர்தல் செலவுக்கு கட்சியின் பூத் ஏஜெண்டுகளோ, கட்சியினரோ 234 தொகுதிகளிலும் நம் வேட்பாளர்களிடம் பணம் கேட்கக்கூடாது. பணம் கொடுத்தால்தான் தேர்தல் பணியில் ஈடுபடுவேன் எனக் கூறினால் அவர்கள் வேண்டாம், தோற்றாலும் பரவாயில்லை என்றார் வைகோ.