Published : 25 Jan 2022 01:20 PM
Last Updated : 25 Jan 2022 01:20 PM

தெருக்களில் தேங்கிக் கிடக்கும் குப்பைகள் - மேலப்பாளையத்தில் கடும் சுகாதார சீர்கேடு: தொற்றுநோய்களால் மக்களின் வாழ்வாதாரம் பாதிப்பு

திருநெல்வேலி மாநகரத்தின் பிரதான பகுதியான மேலப்பாளையம் சுகாதாரத்தில் மிகவும் பின்தங்கியிருக்கிறது. இதனால் பல்வேறு நோய் தொற்றுக்களால் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். அவர்களது வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது.

மேலப்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் வசிக்கிறார்கள். ஆனால், இங்கு போதிய வசதிகளுடன் அரசு மருத்துவமனை செயல்படவில்லை. திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்பட்டும் மேலப்பாளையம் நகர தெருக்களில் குப்பைகள் தேங்கியிருக்கின்றன. கழிவுநீரோடை, பாதாள சாக்கடை அடைப்பு, கன்னிமார் குளத்தில் சாக்கடை கலப்பு, பாளையங்கால்வாயின் அவலம் என்று பட்டியல் நீளுகிறது.

இப்பகுதியில் பெரும்பாலானோர் பீடித்தொழில் செய்து பிழைக்கிறார்கள். இதனால் அவர்களுக்கு நுரையீரல், காசநோய் பிரச்சினைகளும், புற்றுநோய் பாதிப்புகளும் அதிகமுள்ளது. வெளிநாடுகளில் வேலை செய்யும் சிலரை தவிர்த்து தினக்கூலிகளே இங்கு அதிகம். திருநெல்வேலி மாநகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பலகோடி மதிப்பீட்டில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டும், மேலப்பாளையத்தில் சுகாதார சீர்கேட்டை தவிர்க்க திட்டங்கள் செயல்படுத்தப்படாதது இங்குள்ளவர்களுக்கு ஏமாற்றமாகவே இருக்கிறது.

இது குறித்து எஸ்டிபிஐ கட்சியின் சுற்றுச்சூழல் அணி மாவட்ட தலைவர் கா. பக்கீர் முகம்மது கூறியதாவது:

மேலப்பாளையம் நகர் முழுவதும் முழு சுகாதார திட்டத்தை தொடங்க வேண்டும். தூய்மை பணியாளர்களை போதுமான அளவுக்கு பணியில் ஈடுபடுத்த வேண்டும். பழைய முறைப்படி சாலையோரங்களில் மக்கும், மக்காத குப்பை தொட்டிகள் வைத்து, தினமும் குப்பைகளை அப்புறப்படுத்த வேண்டும். ஆடு ,மாடு,கோழி,மீன் போன்ற விற்பனை நிலையங்கள் முன் அதன்கழிவுகளை சேமிக்க தொட்டி வைப்பதுடன், தினமும் அவற்றை அகற்றவும் நடவடிக்கை வேண்டும்.

நகர் முழுவதும் தரமான இரும்புக் கம்பிகளாலான மூடியிடப்பட்ட வடிகால் அமைப்பை உருவாக்க வேண்டும். மேலப்பாளையம் அரசு மருத்துவமனையை தரம் உயர்த்தி மருத்துவர்கள்,செவிலியர்கள், பணியாளர்கள், மருத்துவ உபகரணங்கள், இருக்கைகள், கண்காணிப்பு கேமரா உள்ளிட்ட வசதிகளை மேம்படுத்த வேண்டும். பீடித்தொழில் நிறுவனங்களில் வேலை செய்யும் பணியாளர்கள் சம்பந்தப்பட்ட நிறுவனத்துடன் இணைந்து அவர்களின் உடல் நலனை மாதா மாதம் பரிசோதித்து நலன் காக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.

மேலப்பாளையத்தில் கூடுதலாக ஆரம்ப சுகாதார நிலையங்களை ஏற்படுத்தவும், கன்னிமார்குளம், பாளையங்கால்வாய் உள்ளிட்ட நீர்வளங்களை காக்கவும், கழிவு நீர் கலப்பதை தடுக்கவும் சிறப்பு திட்டம் கொண்டு வர வேண்டும் என்று இப்பகுதி தன்னார்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x