Published : 03 Apr 2016 11:31 AM
Last Updated : 03 Apr 2016 11:31 AM

தேர்தல் பணபேரம் தொடர்பாக ஆணையம் விசாரிக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்

தேர்தல் பணபேரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கேட்டுக்கொண்டார்.

விழுப்புரத்தில் பாமக சார்பில் மாவட்ட பிரச்சினைகள், தீர்வுகள் என்ற நிகழ்ச்சி நேற்று முன்தினம் இரவு நடந்தது. இதில், கட்சித் தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் எம்.பி. தன்ராஜ், கணேஷ்குமார் எம்எல்ஏ, துணைப்பொதுச் செய லாளர் தங்கஜோதி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில், பாமக முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்று பேசும்போது, “மேற்கத்திய நாடுகளில் தேர்தல் வந்தால், வேட்பாளரின் முதல் தகுதியாக ஆரோக்கியமாக உள்ளனரா என்பதை கவனிப்பார்கள். சுகாதாரம், கல்வி, தொழில், வேலை வாய்ப்புகளில் பின்தங்கிய விழுப்புரம் மாவட்டம், மது விற்பனையில் முன்னிலையில் உள்ளது.

49 சதவீதம் குடிசைவாசிகளை முன்னேற விடாமல் திராவிடக் கட்சிகள் பார்த்துக்கொண்டன. கருணாநிதியும் கடந்த 20 ஆண்டு களாக மதுவை ஒழிப்பதாக பேசி வருகிறார். அவர்கள் சார்ந்த மது ஆலைகளை மூடினாலே போதும். சர்க்காரியா தொடங்கி 2ஜி வரை திமுக விஞ்ஞான ரீதியாக ஊழல் செய்ய முனைவர் பட்டம் பெற்றுள்ளது. இதில் அதிமுகவும் ஊழல் செய்கிறது. ஊழலால் தான் விலைவாசி உயர்வும் உள்ளது.

தமிழக மக்கள் மிகவும் சகிப்புத்தன்மை உடையவர்கள், நமக்கென்ன என்றுள்ளனர். அதனால் ஊழல் பெருகி வருகிறது. வெளிநாட்டில் ஆட்சியாளர்கள் இப்படி செய்ய முடியாது. விலைவாசியை குறைத்து, ஊழலை ஒழிக்க முடியும். இதற்காக லோக் ஆயுக்தா தொடங்கி முதல்வரையும் விசாரிக்கும் அதிகாரம் நீதிபதிக்கு வழங்கப்படும். வெளிப்படையான நிர்வாகம், பணி செய்யாத அதிகாரிகளுக்கு அபராதம் போன்றவை மேற்கொள்ளப்படும்.

நிர்வாகம் உங்களை தேடி வரும். நிர்வாக வசதிக்காக விழுப்புரம், வேலூர் போன்ற பெரிய மாவட்டங்கள் பிரிக்கப்படும். அந்தந்த பகுதி உற்பத்திப் பொருளை, மதிப்புக் கூட்டுத் திட்டத்தில் அதிக விலைக்கு விற்க நடவடிக்கை எடுப்போம். நந்தன் கால்வாய் திட்டத்தை 3 ஆண்டு களில் முடிப்பேன். ஆறுகளில் மணல் அள்ள அனுமதிக்கலாமா வேண்டாமா என நிபுணர்களுடன் கலந்தாலோசித்து கொள்கை முடிவு எடுக்கப்படும். மது ஒழிப்பாலும் இலவச கல்வி, சுகாதாரத் திட்டத்தாலும் ஒரு குடும்பத்துக்கு ஆண்டுக்கு ரூ.7 லட்சம் மிச்சப்படுத்த முடியும்.

வேலூரில் வேளாண் பல்கலைக்கழகமும், விழுப்புரத்தில் வேளாண் கல்லூரியும் கொண்டுவரப்படும். பள்ளி, கல்லூரிகளில் நாட்டுப்புறகலை, யோகா, விளையாட்டுக்கு நேரம் ஒதுக்கப்படும். வேலைக்கான தகுதித் தேர்வுகளை நீக்க முடியாது. விவசாயிகளுக்கு டிராக்டர், சோலார் மோட்டார், இடுபொருட்கள் வழங்கப்படும். 100 நாள் திட்டத்தில், விவசாயிகளுடன் சேர்ந்து, வேளாண் பணிகள் செய்யப்படும். அதற்காக ரூ.350 கூலி கிடைக்கும்” என்றார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: விரைவில் பாமக வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும். நான் எங்கு போட்டியிடுகிறேன் என கட்சி தலைமை முடிவு செய்யும். தேர்தல் ஆணையம் இன்னும் சிறப்பாக பணியாற்ற வேண்டும். ஆளும் கட்சிக்கு சாதகமான அதிகாரிகளை மாற்ற வேண்டும். தேர்தல் பண பேரம் தொடர்பாக வைகோ உள்ளிட்ட யார் புகார் தெரிவித்திருந்தாலும், அது தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த வேண்டும், என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x