Published : 24 Jan 2022 04:40 PM
Last Updated : 24 Jan 2022 04:40 PM

அரசு வேலை வாங்கி தருவதாக ரூ .17 லட்சம் மோசடி: முன்னாள் முதல்வர் உதவியாளரின் ஜாமீன் மனு தள்ளுபடி

சென்னை: அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.17 லட்சம் மோசடி செய்த வழக்கில் கைதான முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் உதவியாளர் மணியின் ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள பூசாரிப்பட்டியை சேர்ந்தவர் மணி என்பவரிடம் அரசு வேலை வாங்கி தருவதற்காக கடலூர் மாவட்டம் நெய்வேலி பகுதியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவர் 17 லட்ச ரூபாய் கொடுத்துள்ளார். முன்னாள் முதல்வரான எடப்பாடி பழனிச்சாமியிடம் உதவியாளராக மணி சில ஆண்டுகளாக இருந்ததை நம்பி பணம் கொடுக்கப்பட்ட நிலையில், வேலையும் வாங்கி கொடுக்காமல், பணத்தை மோசடி செய்துவிட்டதாக சேலம் மத்திய குற்றப் பிரிவு காவல்துறையிடம் தமிழ்ச்செல்வன் புகார் அளித்தார்.

மேலும், மணிக்கு பணம் அனுப்பியதற்கான ஆவணங்களையும் அவர் சமர்ப்பித்திருந்தார். தமிழ்ச்செல்வன் தவிர்த்து மேலும் சிலரும் உதவியாளர் மணி மீது போலீசில் புகார் அளித்திருந்தனர். இந்த புகாரின் பேரில் மணி மீது போலீசார் வழக்குப் பதிவு செய்திருந்த நிலையில், தலைமறைவாக இருந்த மணியை சேலம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் மணி, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் தன் மீதான புகார் பொய்யானது என்றும், தான் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிப்பதாகவும், எனவே தனக்கு நிபந்தனை அடிப்படையில் ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி டி.வி.தமிழ்ச்செல்வி முன்பு விசாரணைக்கு வந்தது .அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, மனுதாரர் மோசடி செய்ததற்கான ஆதாரங்கள் உள்ளது. வழக்கு விசாரணை நடைபெற்று வருவதால் மனுதாரருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து வாதிட்டார். இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் முன்னாள் உதவியாளர் மணியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x