Published : 24 Apr 2016 11:36 AM
Last Updated : 24 Apr 2016 11:36 AM

தர்மத்துக்கும் அதர்மத்துக்கும் நடக்கும் போர்: கோவையில் தேமுதிக விஜயகாந்த் காரசாரம்

இந்த தேர்தல் தர்மத்துக்கும் அதர் மத்துக்கும் நடக்கும் போர் என கோவையில் நடந்த பொதுக்கூட்டத் தில் விஜயகாந்த் பேசினார்.

கோவை அருகே உள்ள வடவள்ளியில் தேமுதிக, மக்கள் நலக் கூட்டணி, தமாகா வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது. அதில் மேட்டுப்பாளையம், தொண்டா முத்தூர், கோவை வடக்கு, கோவை தெற்கு, கவுண்டம்பாளையம் ஆகிய தொகுதிகளில் கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிமுகம் செய்து வைத்தார்.

அப்போது அவர் பேசியதாவது:

கோவை நகரத்திலிருந்து வடவள்ளிக்கு வந்ததைப் பார்க்கும்போது, சென்னையில் என் வீட்டிலிருந்து தி.நகர் அலுவலகம் சென்றது போல இருந்தது. அவ்வளவு போக்குவரத்து நெரிசல் கோவையில் உள்ளது. அதேபோல இங்கு 20 நாட்களுக்கு ஒரு முறை தான் தண்ணீர் கிடைக்கிறது என்கிறார்கள். இந்த 5 வருடமாக ஜெயலலிதா என்னதான் செய்தார் என்று தெரியவில்லை.

ஒவ்வொரு கூட்டத்திலும் மக்களுக்காக நான் என்கிறார்களே, அவர்களுக்கு வெட்கமாக இல்லையா? இந்த கோவையை, இந்தியாவின் மான்செஸ்டர் என்றார்கள். ஆனால் இன்று கோவை அப்படி இல்லை. கேட்டால், தமிழகமே மின் மிகை மாநிலமாக மாறியுள்ளதாக கூறுகிறார்கள். அதிமுக, திமுக என்ன செய்தது, தமிழகத்துக்கு என்னென்ன திட்டங்கள் கொடுத்துள்ளார்கள் என்பதை வெள்ளையறிக்கையாக வெளியிட அவர்களால் முடியுமா? அல்லது வெறும் அறிக்கையை அவர்களால் கொடுக்க முடியுமா?

இதேபோலத்தான் நல்லாட்சி அமைக்க ஆதரவு கேட்கிறார் திமுக தலைவர் கருணாநிதி. ஐந்து முறை செய்யாதவர், இப்போது மட்டும் என்ன செய்து கொடுத்துவிடப் போகிறார்? அதிமுகவில் எம்ஜிஆர் இரட்டை விரல் காட்டியது வெற்றிச் சின்னமாக இருந்தது. ஆனால் இன்று ஜெயலலிதா இரண்டு விரல்களைக் காட்டுவது பொதுக்கூட்டத்தில் இரண்டு பேர் இறப்பார்கள் என்ற அர்த்தத்தில் உள்ளது.

வேட்பாளர்களை மாற்று வதிலும், கொள்ளையடித்தது யார் என்பதிலும் திமுக, அதிமுகவினரிடையே சண்டை நீடிக்கிறது. 25 ஆண்டுகளாக இருவரும் மாறி, மாறி ஆட்சி அமைத்தும், மக்களுக்கும் எதுவும் செய்யவில்லை. பின்னர் ஏன் இந்த அக்கப்போர் செய்கிறார்கள் எனப் புரியவில்லை?

சபரி திரைப்படத்துக்கு ‘ஐந்து ரூபாய்’ என்ற பாட்டுக்காக பாங்காங் கில் இருந்து பட்டாயாவுக்கு சென்றேன். 45 நிமிடத்தில் சென்று விட்டேன். அங்கு மிகக் குறுகிய காலத்தில் 300 மேம்பாலங்கள் அமைத்துள்ளார்கள். இதைப் பற்றிக் கேட்டால், இந்தியா வறுமை நாடு என்கிறார்கள். கோடிக்கணக்கில் கொள்ளையடிக்கும் நாடு தான் வறுமை நாடா?

20 வருடத்துக்கு முன்பு, மருத மலைக்கு வந்தேன். ஆறுமுகம் குடியிருக்கும் ஊர் இது. ஆறுமுகத்துக்கு என்றுமே ஏறுமுகம் தான்; இறங்குமுகம் இல்லை. இந்த தேர்தல் தர்மத்துக்கும் அதர்மத்துக் கும் நடக்கும் போர். அதில் திமுக, அதிமுக எனும் அதர்மங்கள் தோல்வியடையும். தர்மத்தின் அடையாளம் நாங்கள் ஆறு பேர்.

இவ்வாறு அவர் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x