Published : 24 Jan 2022 06:46 AM
Last Updated : 24 Jan 2022 06:46 AM

தமிழகத்தில் 3-வது ஞாயிற்றுக்கிழமையாக முழு ஊரடங்கு: கரோனா தீவிரத்தை உணர்ந்த மக்கள் வீட்டுக்குள் முடங்கினர்

சென்னை: தமிழகத்தில் 3-வது வாரமாக நேற்றுமுழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. கரோனா பாதிப்பின் தீவிரத்தை பொதுமக்கள் உணர்ந்ததால், வெளியில் செல்வதை தவிர்த்து, வீட்டுக்குள்ளேயே இருந்தனர்.

தமிழகத்தில் கரோனா, ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்த ஏற்கெனவே இருந்த ஊரடங்கு தளர்வுகள் குறைக்கப்பட்டு, ஜன.6முதல் கூடுதல் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. அன்று முதல்இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன், ஜன.9-ம் தேதி ஞாயிற்றுக்கிழமையில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஜன.16-ம் தேதி ஞாயிறன்றும் முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது.

இதுதவிர, வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டுத் தலங்களில் பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் தினசரி கரோனா பரவல் நேற்றுமுன்தினம் 30 ஆயிரத்தை தாண்டியதால், 3-வது ஞாயிற்றுக்கிழமையாக நேற்றும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

இந்த முழு முடக்கம் நேற்று முன்தினம் சனிக்கிழமை இரவு 10 மணிக்கு தொடங்கி, இன்று காலை 5 மணிவரை அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து, சனிக்கிழமையில் அனைத்து வர்த்தகப் பகுதிகள், காய்கறி, இறைச்சி கடைகளில் கூட்டம் அலைமோதியது. அன்று இரவு முதல் போலீஸார் அனைத்துபகுதிகளையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். சோதனைச் சாவடிகள் மூலம் புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, ஆந்திர மாநில எல்லைகள், மாவட்ட எல்லைகள் கண்காணிக்கப்பட்டன.

தேவையின்றி சுற்றித் திரிந்தவர்கள் எச்சரித்து திருப்பி அனுப்பப்பட்டனர். தொடர்ந்து, அவ்வாறு சுற்றியவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

நேற்று முகூர்த்த நாள் என்பதால், அதிக அளவில் திருமணங்களுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. திருமண மண்டபங்களில் 100 பேருக்கு மட்டுமே அனுமதிஎன்பதால், ஆரவாரமின்றி பல திருமணங்கள் நடைபெற்றன. அழைப்பிதழ்கள் வைத்திருந்தவர்கள் மட்டும் திருமண நிகழ்வுகளுக்கு அனுமதிக்கப்பட்டனர்.

சாலையிலேயே திருமணம்

கோயில்கள் மூடப்பட்டிருந்ததால், கடலூர் திருவந்திபுரம் சோமநாத சாமி கோயில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் சாலையிலேயே திருமணங்கள் நடந்தேறின.

தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்கள், சுற்றுலா தலங்களும் மூடப்பட்டு, காவல் துறையினர், வனத் துறையினர் பாதுகாப்பில் ஈடுபட்டதால், பொதுமக்கள் அங்கு செல்ல முடியாததால், வீட்டுக்குள் முடங்கினர். சுற்றுலா தலங்களுக்கு ஏற்கெனவே சென்றவர்கள், விடுதிகளைவிட்டு வெளியே வரமுடியாத நிலை ஏற்பட்டது.

முழு முடக்கம் அமல்படுத்தப்பட்ட நிலையிலும், அத்தியாவசிய பணிகளுக்கு தேவையான அனுமதிகள் வழங்கப்பட்டிருந்தன. குறிப்பாக, மருத்துவப் பணிகள், மருந்தகங்கள், பால், செய்தித்தாள் விநியோகம், ஏடிஎம் மையங்கள், சரக்கு வாகனப் போக்குவரத்து, பெட்ரோல் டீசல் பங்க்குகள் 24 மணி நேரமும் இயங்க அனுமதிக்கப்பட்டது.

பொது போக்குவரத்து, மெட்ரோ ரயில் இயங்காத நிலையிலும், விமானம், ரயில், பேருந்து நிலையங்களுக்கு செல்வதற்கு சொந்தமற்றும் வாடகை வாகனங்களை பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்பட்டது. இருப்பினும் பயணச்சீட்டுகளை போலீஸார் பரிசோதித்த பிறகே அனுமதித்தனர். சூழ்நிலையை பயன்படுத்தி ஆட்டோக்கள், வாடகை வானங்களில் அதிக வாடகை வசூலிக்கப்படுகிறதா என்று போக்குவரத்து போலீஸார் ஆய்வு செய்தனர்.

உணவகங்கள் இயங்கின

முழு முடக்கம் இருந்தாலும் உணவகங்கள் இயங்கவும், உணவு விநியோகிக்கும் மின் வணிக நிறுவனங்கள், உணவகங்களின் வீட்டுவிநியோக முறைகளும் செயல்படஅனுமதி அளிக்கப்பட்டது.

முந்தைய வாரங்கள்போல இல்லாமல், கரோனா பாதிப்பின் தீவிரத்தை உணர்ந்த பொதுமக்கள், வெளியில் செல்வதை தவிர்த்து,வீட்டுக்குள்ளேயே இருந்தனர். தமிழகம் முழுவதும் அமல்படுத்தப்பட்ட 31 மணி நேர முழு முடக்கம் இன்று காலை 5 மணியுடன் முடிவுக்கு வந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x