பொதுத்துறை பணியிடங்கள் குருப் - 4, 2 தேர்வுகளுடன் சேர்ப்பு: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் திட்டம்

பொதுத்துறை பணியிடங்கள் குருப் - 4, 2 தேர்வுகளுடன் சேர்ப்பு: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் திட்டம்
Updated on
1 min read

சென்னை: தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்குத் தேவைப்படும் ஊழியர்கள், அலுவலர்கள் ஆகியோர் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) மூலம் தேர்வு செய்யப்படுகின்றனர். இதற்காக குரூப்-1, குரூப்-3, குரூப்-2, குரூப்-2-ஏ, குரூப்-4 தேர்வுகள் நடத்தப்படுகின்றன., தொழில்நுட்பப் பணிகள் தொடர்பான காலி இடங்களுக்கு டிஎன்பிஎஸ்சி தனித்தனியே தேர்வுகளை நடத்தி வருகிறது. குரூப்-4 போட்டித் தேர்வு 10-ம் வகுப்பு கல்வித்தகுதியை கொண்ட பணிகளுக்கும், குரூப்-2, குரூப்-2ஏ, குரூப்-1 தேர்வுகள் பட்டப் படிப்பை அடிப்படைத் தகுதியாக கொண்டபதவிகளுக்கும் நடத்தப்படுகின்றன.

உதவிப் பொறியாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு பி.இ., பி.டெக். படிப்பு கல்வித் தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல,வேளாண் அலுவலர் பதவிக்கு பி.எஸ்சி. விவசாயம், தோட்டக்கலை அலுவலர் பணிக்கு பி.எஸ்சி.தோட்டக்கலை, உதவி தொழிலாளர் ஆணையர் பதவிக்கு பட்டப் படிப்புடன் தொழிலாளர் நலன் தொடர்பான டிப்ளமா படிப்பு ஆகியவை கல்வித் தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், தமிழ்நாடு மின்சார வாரியம், வீட்டு வசதி வாரியம், ஆவின், மாநகர போக்குவரத்துக் கழகம் உட்பட மாநில அரசின் பொதுத்துறை நிறுவனங்களின் பணியாளர்களையும் டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு செய்ய அரசு முடிவுசெய்துள்ளது. இது தொடர்பாக அண்மையில் நடந்த சட்டப்பேரவைக் கூட்டத்தில் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது.

தற்போது பொதுத் துறை நிறுவனங்கள் தங்களுக்கு தேவைப்படும் பணியாளர்களை, தாங்களாக அறிவிப்பு வெளியிட்டு, தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வுநடத்தி ஆட்களைத் தேர்வு செய்கின்றன. இனி அப்பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி மூலமாக நிரப்பப்படும்.

இந்நிலையில், பொதுத் துறைநிறுவனங்களின் காலி பணியிடங்களை ஒவ்வொரு பதவியின் கல்வித் தகுதிக்கு ஏற்ப குரூப்-4, குரூப்-2, குரூப்-2-ஏ தேர்வுகளுடன் இணைத்து தேர்வு நடத்தவும், தொழில்நுட்பக் கல்வி உட்பட குறிப்பிட்ட கல்வித் தகுதி உடைய பதவிகளுக்கு தனியாக தேர்வுகளை நடத்தவும் டிஎன்பிஎஸ்சி திட்டமிட்டு வருகிறது.

அந்த வகையில், பொதுத் துறை நிறுவனங்களின் இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்தர் போன்ற பதவிகள் குரூப்-4 தேர்வுடனும், உதவியாளர் மற்றும் அதற்கு இணையான பதவிகள் ஊதிய நிலைக்கு ஏற்ப குரூப்-2 அல்லது குரூப்-2-ஏ தேர்வுடனும் சேர்க்கப்படும். குரூப்-4, குரூப்-2-ஏ தேர்வுகளுக்கு நேர்முகத் தேர்வு கிடையாது. இந்த தேர்வுக்கான அறிவிப்பு பிப்ரவரி மாதம் வெளியிடப்படும், இதன் மூலம் 5,831 காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும் டிஎன்பிஎஸ்சி ஏற்கெனவே அறிவித்துள்ளது.

அதேபோல, குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பு மார்ச் மாதம் வெளியிடப்படும், இத்தேர்வு மூலம் 5,255 காலி இடங்கள் நிரப்பப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மின்சார வாரியம், மாநகர போக்குவரத்துக் கழகம், வீட்டு வசதி வாரியம், ஆவின்உள்ளிட்ட பொது த்துறை நிறுவனங்களில் உள்ள காலி இடங்கள் உடனடியாக நிரப்பப்படும் பட்சத்தில், அந்தப் பணியிடங்களும் குரூப்-4, குரூப்-2, குரூப்-2-ஏ தேர்வுகளுடன் சேர்க்கப்பட்டால், காலி இடங்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in