

கும்பகோணம்: காரைக்கால் மாவட்டம் கோட்டுச்சேரி தொகுதி முன்னாள் திமுக எம்எல்ஏ பஞ்சவர்ணத்தின் மகன், கும்பகோணம் ரயில் நிலையத்தில் நேற்று மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து கும்பகோணம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் கோட்டுச்சேரி முத்துசாமி பிள்ளை வீதியைச் சேர்ந்தவர் பஞ்சவர்ணம். கோட்டுச்சேரி தொகுதியில் 1980-83 காலகட்டத்தில் திமுக எம்எல்ஏவாக இருந்த இவர், கடந்த 2018-ம் ஆண்டுகாலமானார். இவரது மகன் வெற்றிச்செல்வன்(42), காரைக்காலில் மதுபானக் கடைகளை நடத்தி வந்தார்.
சில நாட்களாக பல்வேறு பிரச்சினைகள் காரணமாக மனமுடைந்த நிலையில் இருந்த வெற்றிச்செல்வன் ஜன.21-ம் தேதி மாலை வீட்டிலிருந்து காரில் வெளியில் சென்றார்.
ஆனால், அதன்பின்னர் அவர்வீடு திரும்பவில்லை. இதையடுத்து, குடும்பத்தினர் அவரைபல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதனால், கோட்டுச்சேரி காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் வெற்றிச்செல்வனை காணவில்லை என அவரது மனைவி ராஜேஸ்வரி புகார் அளித்தார். இதுதொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வந்தனர்.
இந்நிலையில், கும்பகோணம் ரயில் நிலையத்தில் நேற்று காலை ஒரு கார் வெகுநேரமாக நிறுத்தப்பட்டிருப்பதாகவும், காருக்கு வெளியே ஒருவர் மயங்கிக் கிடப்பதாகவும் ரயில்வே காவல் நிலையத்துக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, காவல் உதவி ஆய்வாளர் சிவராமன் அங்கு சென்று பார்த்தபோது,காரின் அருகில் கிடந்த நபர் உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது.
தொடர்ந்து, காரில் இருந்த செல்போன் உதவியுடன் ரயில்வே போலீஸார் நடத்திய விசாரணையில், கும்பகோணம் ரயில் நிலையத்தில் உயிரிழந்து கிடந்தவர் கோட்டுச்சேரி முன்னாள் எம்எல்ஏ பஞ்சவர்ணத்தின் மகன் வெற்றிச்செல்வன் என்பது தெரியவந்தது.
இதுகுறித்து, ரயில்வே போலீஸார் அளித்த தகவலின்பேரில், கும்பகோணம் மேற்கு போலீஸார் அங்கு சென்று, வெற்றிச்செல்வனின் சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இதுதொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து, வெற்றிச்செல்வனின் மரணத்துக்கான காரணம் என்ன என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.