

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வயல்வெளியில் நாட்டு வெடிகுண்டுகளை பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவ்வழியாகச் சென்ற டிராக்டர் சக்கரம் ஏறியதில் நாட்டு வெடிகுண்டு ஒன்று வெடித்து சிதறியது.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ளது தெற்கு கோட்டையூர் மேற்கு காலனி. இப்பகுதியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இந்த காலனி பகுதியில் ஆதிதிராவிட நல உயர்நிலைப் பள்ளியின் பின்புறம் உள்ள தரிசு நிலத்தில், அதே பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவர் நேற்று டிராக்டர் ஓட்டிச் சென்றார்.
டிராக்டர் ஏறியது
அப்போது, அப்பகுதியில் கிடந்த நாட்டு வெடிகுண்டு மீது டிராக்டர் சக்கரம் ஏறியதில் பலத்த சப்தத்துடன் வெடித்தது.
தகவல் அறிந்து வந்த போலீஸார் நடத்திய சோதனையில் மேலும் 6 நாட்டு வெடிகுண்டுகளை கண்டெடுத்தனர். சம்பவ இடத்தில் எஸ்.பி. மனோகரன் விசாரணை நடத்தினார். இதுதொடர்பாக வில்லிபுத்தூர் நகர் போலீஸார் விசாரிக்கின்றனர்.