

சென்னை: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களின் தொழிலாளர்கள் சம்மேளனம் (ஏஐடியுசி) பொதுச்செயலாளர் ஆர்.ஆறுமுகம் கூறியது: போக்குவரத்து தொழிலாளர்களின் 14-வது புதிய ஊதிய ஒப்பந்தம் விரைவில் ஏற்படுத்த வேண்டுமென்பது பெரிய எதிர்பார்ப்பாக இருக்கிறது.
6 ஆண்டுகளாக நிறுத்தி வைத்துள்ள அகவிலைப்படி உயர்வை ஓய்வூதியர்களுக்கு உடனே வழங்க வேண்டும், மருத்துவ காப்பீடு ஏற்படுத்த வேண்டும். அதுபோல், 2003-ம் ஆண்டுக்கு பிறகு பணியில் சேர்ந்தவர்களை ஓய்வூதியத் திட்டத்தில் இணைக்க வேண்டும்.
பெண்கள் மகளிர் இலவச பயண திட்டத்தில் தினசரி பேட்டா இன்சென்டிவ் மாற்றியமைக்க வேண்டும். அதுபோல், கடந்த ஆட்சியில் போராட்ட காலங்களில் போடப்பட்ட காவல்துறை வழக்குகளை கைவிட வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து மண்டல அலுவலகங்களின் முன்பு நாளை (25-ம் தேதி) ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளோம். இதில், ஏராளமான போக்குவரத்து தொழிலாளர்கள் பங்கேற்கவுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.