Published : 24 Jan 2022 08:32 AM
Last Updated : 24 Jan 2022 08:32 AM

தாம்பரம் மாநகராட்சியில் மழையால் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க ஒப்பந்ததாரர்கள் தயக்கம்: 55 சதவீதம் வரை கமிஷனாக செல்வதாக புகார்

தாம்பரம்: சாலை தரமானதாக அமைக்க அதிகாரிகள் வலியுறுத்தியதால், மழையால் சேதமடைந்த சாலைகளைச் சீரமைக்க தாம்பரம் மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர்.

தாம்பரம் மாநகராட்சியில் மழையால் சேதமடைந்த 132 சாலைகளை, 2021-22-ம் ஆண்டுக்கான மாநில பேரிடர் மேலாண்மை நிதி ரூ.9.63 கோடியில் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், சாலைப் பணிகளில் முறைகேடு நடைபெறுவதாகப் புகார்கள் வந்துள்ளன. அதன்பேரில், அண்மையில் நகராட்சி நிர்வாகம் அதிகாரிகள் சாலைகளின் உறுதித்தன்மை, பயன்படுத்தப்படும் பொருட்களின் தரம், சாலையின் நீளம், அளவு என அனைத்தும் சரியாக உள்ளதா என ஆய்வு மேற்கொண்டனர். தலைமைச் செயலாளர் வெ.இறையன்புவும் சாலைப் பணிகளை நேரில் ஆய்வு செய்தார்.

இதைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாக இயக்குநர் பா.பொன்னையா, "அரசு விதிகளுக்கு உட்பட்டு சாலைகளை அமைக்க வேண்டும். சாலைஅமைப்பதில் புகார் ஏதேனும் வந்தால் சம்பந்தப்பட்ட பொறியாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என எச்சரித்தார்.

எனவே, பொறியாளர்கள் ஒப்பந்ததாரர்களிடம் விதிகளுக்கு உட்பட்டு சாலை அமைக்க வேண்டும் எனக் கடுமையாக அறிவுறுத்தினர். ஆனால், சாலை சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள, பல ஒப்பந்ததாரர்கள் தயக்கம் காட்டி வருகின்றன. சாலைகளைச் சீரமைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால், ஒப்பந்ததாரர்களைச் சமரசம் செய்யும் முயற்சிகளில், அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாகத் தெரிகிறது.

இதுகுறித்து மாநகராட்சி பொறியாளர்களிடம் கேட்டபோது, "சாலையை உரியத் தரத்துடன் விதிமுறைகளுக்கு உட்பட்டு அமைக்கவேண்டுமெனக் கடுமையாக அறிவுறுத்தல்கள் வழங்கியுள்ளோம். மேலும் பணிகள் நடைபெறும் போதுசம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. தவறு இருக்கும் பட்சத்தில் அதைச் சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சாலை அமைப்பதில் தயக்கம் காட்டும் ஒப்பந்ததாரர்களின் ஒப்பந்தத்தை ரத்துசெய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

இதுகுறித்து ஒப்பந்ததாரர்கள் சிலர் கூறும்போது, "சாலைகள் தரத்துடன் அமைக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆனால், ஒரு லட்சம் மதிப்புள்ள சாலைப் பணிக்கு ரூ.55 ஆயிரம் வரை கமிஷனாக செல்கிறது. விலைவாசியும் கடுமையாக உயர்ந்துவிட்டது.

இதனால் சாலைகளை அரசு விதிகளுக்கு உட்பட்டு தரமாக அமைக்க முடியவில்லை. கமிஷன் வாங்குவதை அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் நிறுத்திவிட்டால் சாலைகளைத் தரத்துடன் அமைக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.

மேலும், தாம்பரம் மாநகராட்சியில் பல ஒப்பந்தங்களுக்கு ரூ.25கோடிக்கு மேல் நிர்வாகம் பாக்கிவைத்துள்ளது. இதனால் நாங்கள் கடன் சுமையில் சிக்கியுள்ளோம். கமிஷனையும் பெற்றுக்கொண்டு சாலைகளைத் தரமாகஅமைப்பது சாத்தியமில்லை. இதனால் நாங்கள் பணிகளைச் செய்யத் தயங்குகிறோம்" என்றனர்.

தாம்பரம் மாநகராட்சியில் மழையால் சேதமடைந்த 132 சாலைகளை,2021-22-ம் ஆண்டுக்கான மாநில பேரிடர் மேலாண்மை நிதி ரூ.9.63 கோடியில் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x