Published : 24 Jan 2022 08:23 AM
Last Updated : 24 Jan 2022 08:23 AM

சதானந்தபுரம், ஆலப்பாக்கம் பகுதிகளில் ஈஸ்டர்ன் பை பாஸ் திட்டத்தில் உயரமாக கட்டப்படும் கால்வாய்கள்: வீடுகளுக்குள் மழைநீர் புகும் அபாயம் உள்ளதென மக்கள் புகார்

பெருங்களத்தூர் அருகே சதானந்தபுரத்தில் வீடுகளை விட உயரமாக கட்டப்படும் மழைநீர் கால்வாய்.

தாம்பரம்: பெருங்களத்தூரிலிருந்து ஜிஎஸ்டி மற்றும் வேளச்சேரி சாலைகளை இணைக்கும் வகையில் ஈஸ்டர்ன் பை பாஸ் சாலை திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் பெருங்களத்தூரில் இருந்து ஆலப்பாக்கம் வழியாக மப்பேடு வரை சாலை விரிவாக்கம் மற்றும் மழைநீர் கால்வாய் கட்டும் பணிகள் நடக்கின்றன. தற்போதுள்ள நிலையிலிருந்து 5 அடி உயர்த்தி, கால்வாய் கட்டப்படுவதால், சதானந்தபுரம் மற்றும் அதைச் சுற்றியபகுதிகளில், வீடுகள் மற்றும் கடைகள் பள்ளத்தில் இருப்பதுபோல் உள்ளன. இதனால், மழை, வெள்ளம் வீடுகளுக்குள் புகுவதுடன்,கழிவுநீர் வெளியேறுவதில் சிக்கல் எழுந்துள்ளது.

மேலும் குடியிருப்புகளை விட வடிகால் உயரம் அதிகமாக உள்ளதால், வீட்டை விட்டு வெளியேற முடியாமல் மக்கள் தவிக்கின்றனர். தங்கள் இருசக்கர வாகனங்களை நிறுத்த முடியாமலும், எடுக்க முடியாமலும் பலர் சிரமப்படுகின்றனர். இதைத் தடுக்கும் வகையில், கால்வாய் உயரத்தைக் குறைத்துக் கட்ட, அதிகாரிகள் முன்வர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து, ஆலப்பாக்கத்தைச் சேர்ந்த மதியரசன் கூறியதாவது: சதானந்தபுரம், ஆலப்பாக்கம் பகுதிகளில் அமைக்கப்படும் மழைநீர் கால்வாயின் உயரம் அதிகமாக உள்ளது. இதனால்கடைகள் மற்றும் வீடுகளுக்கு மழைநீர் புகும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஆழம் அதிகரித்து உயரத்தைக் குறைக்க வேண்டும் என்ற வேண்டுகோளை நெடுஞ்சாலைத் துறையினர் ஏற்கவில்லை. மாறாகஉயரம் அதிகமாகக் கால்வாய் அமைக்கப்பட்டு வருகிறது. இதனால், ஏராளமான வீடுகளும் சாலையோரம் உள்ள கடைகளும் தாழ்வான நிலைக்குச் சென்றுள்ளன.

எனவே அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்து பொதுமக்களைப் பாதிக்காத வகையில் கால்வாய் மற்றும் சாலைகளை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x