

சென்னை: 14 ஆண்டுகளுக்கு பிறகு வடபழனி முருகன் கோயிலில் நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. இன்று முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.
சென்னை வடபழனி முருகன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றதாக விளங்கி வருகிறது. இக்கோயிலில் கடந்த 2007-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஆகம விதிப்படி 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும். எனவே, கடந்த 2020-ம் ஆண்டு பாலாலயம் செய்யப்பட்டு கோயிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. கரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தியது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 2 ஆண்டுகளுக்குப் பிறகு அண்மையில் திருப்பணிகள் நிறைவு பெற்றன.
14 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம் நடைபெறும் நிலையில், யாகசாலையில் 108 ஹோமகுண்டங்கள் அமைக்கப்பட்டன. இந்த யாகசாலையில் வைத்து பூஜிப்பதற்காக கங்கை, யமுனை, சரஸ்வதி, துங்கபத்ரா, காவேரி, கிருஷ்ணா, கோதாவரி, தாமிரபரணி உள்ளிட்ட நதிகளில் இருந்து தீர்த்தம் கொண்டு வரப்பட்டது. மேலும், ராமேஸ்வரம் தீர்த்தக் கிணறு, அறுபடை முருகன் கோயில்கள் என 15 இடங்களில் இருந்து புண்ணிய தீர்த்தம் கொண்டு வரப்பட்டது. அதில், 1,300 கலசங்கள் வைக்கப்பட்டிருந்தன.
யாகசாலை பூஜைகளை பிள்ளையார்பட்டி சர்வசாதகம் பிச்சை குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் நடத்தினர். நேற்று காலை 6 மணிக்கு ஆறாம் கால யாகசாலை பூஜைகள் தொடங்கி நடைபெற்றன. காலை 9 மணியளவில் கோபுர கலசங்களுக்கு சிவாச்சாரியர்கள் பூஜை நடத்தினர். இதைத்தொடர்ந்து யாக சாலையில் இருந்து புனித நீர் கலசங்களை ஊர்வலமாக எடுத்து கோயிலைச் சுற்றி வந்தனர்.
காலை 10 மணியளவில் ராஜகோபுரம் உட்பட அனைத்து கோபுர விமானங்களுக்கும் கலசங்கள் கொண்டு செல்லப்பட்டன. காலை 10.30 மணியளவில் கோபுரங்களில் புனித நீர் தெளிக்கப்பட்டது. ஒரே நேரத்தில் அனைத்து விமானங்களுக்கும் அபிஷேகம் செய்து கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து கற்பூர ஆரத்தி காட்டப்பட்டது. அப்போது, வானத்தில் கருடன்கள் வட்டமிட்டப்படி இருந்தன. இதையடுத்து, கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டது. கும்பாபிஷேக நிகழ்வில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, முதன்மைச் செயலாளர் சந்திரமோகன், ஆணையர் குமரகுருபரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
முழு ஊரடங்கு காரணமாக கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இருப்பினும், கோயில் சுற்றுப்புற பகுதிகளில் வசிக்கும் மக்கள் கோயிலுக்கு வருகை தந்தனர். இதையடுத்து காவல்துறையினர் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பொதுமக்களை அங்கு அனுமதித்தனர். கோயிலின் வாசல் மூடப்பட்டிருந்த நிலையில், வெளியே நின்றபடி பக்தர்கள் கும்பாபிஷேக விழாவைக் கண்டுகளித்தனர்.
இதனால் சுற்றிலும் உள்ள வீடுகளின் மாடிகளிலும், தெருக்களிலும் நின்றபடி பக்தர்கள் கும்பாபிஷேகத்தை தரிசித்தனர். கும்பாபிஷேகம் நடக்கும்போது, பக்தர்கள் ‘கந்தனுக்கு அரோகரா, முருகனுக்கு அரோகரா’ என முழக்கமிட்டு குடமுழுக்கு விழாவை தரிசனம் செய்தனர். இதுமட்டுமின்றி, கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் அனைத்தும் தொலைக்காட்சி, யூ-டியூப் சேனல் போன்றவை மூலம் நேரலையில் ஒளிபரப்பப்பட்டது.
நேற்று மாலை 6 மணிக்கு மகாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, முருகப்பெருமானுக்கு திருக்கல்யாண வைபவமும் நடைபெற்றது. இன்று முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட உள்ளனர். கும்பாபிஷேகத்துக்கு அனுமதிக்கப்படாத நிலையில் இன்று பக்தர்கள் ஏராளமானோர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, கோயிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக சிறப்பு ஏற்பாடுகள் கோயில் நிர்வாகத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.