

சென்னை: விதிகளுக்குப் புறம்பாக பணியில் ஈடுபடுத்தப்பட்ட மின்வாரிய ஒப்பந்த ஊழியர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இதுதொடர்பாக, உரிய விசாரணை நடத்தி, தவறுக்குக் காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் தாலுகா, பாலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆர்.அருள்பதி. இவர் சென்னையில் உள்ள முத்தியால்பேட்டையில் மின்வாரிய ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில், நேற்றுமுன்தினம் பணியில் இருந்தபோது மின்விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.
ஒப்பந்த ஊழியர்களை மின்பழுது பார்க்கும் பணியில் ஈடுபடுத்தக் கூடாது என்ற நிலையில், அவரை மின்பழுது பார்க்கும் பணியில் ஈடுபடுத்தியதால்தான் அவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து, அருள்பதியின் சகோதரர் சுந்தர் கூறும்போது, “எனது சகோதாரர் கடந்த 5 ஆண்டுகளாக மின்வாரிய ஒப்பந்ததாரரிடம் ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்து வந்தார். சம்பவ தினத்தன்று, பள்ளம் தோண்டுவதற்காக என்று கூறி எனது சகோதரரை அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால், அவரை பள்ளம் தோண்டும் பணியில் ஈடுபடுத்துவதற்கு பதிலாக மின்மாற்றியில் பழுது பார்க்கும் பணியில் ஈடுபடுத்தி உள்ளனர். அந்த சமயத்தில் எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி எனது சகோதரர் உயிரிழந்தார். அவருக்கு உரிய இழப்பீடு வழங்க மின்வாரியம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
இதுகுறித்து, மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, “பொதுவாக ஒப்பந்த ஊழியர்களை மின்சார கருவிகளில் பழுது பார்க்கும் பணியில் ஈடுபடுத்துவது கிடையாது. இந்த சம்பவத்தில் என்ன நடந்தது என்பது குறித்து துறைரீதியாக விசாரணை நடத்தி தவறிழைத்த பொறியாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அவரது குடும்பத்துக்கு நிவாரண உதவி வழங்கவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்றனர்.