

எலவனாசூர்கோட்டை ஊராட்சியில் நூறு நாள் வேலை உறுதித் திட்டத்தின் கீழ் சுடுகாடு மற்றும் வழிபாட்டு தலத்தை சுத்தம் செய்ய நிர்ப்பந்தம் செய்ததாக சர்ச்சை எழுந்துள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் எலவனாசூர்கோட்டை ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்ட பயனாளிகள் சுமார் 350 பேர் உள்ளனர். இவர்களுக்கு ஊராட்சி நிர்வாகம் சுழற்சி முறையில் பணி கொடுத்து ஊதியம் வழங்கி வருகிறது. அந்த வகையில் நேற்று மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் பணி செய்ய வந்த பயனாளிகளிடம் ஒரு வழிபாட்டு தலத்தையும் அதையொட்டிய சுடுகாட்டையும் சுத்தம் செய்ய துணைத் தலைவர் பணித்துள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக வீடியோபதிவு ஒன்றும் பரவி வருகிறது.
அந்த வீடியோவில் 100 நாள் வேலை திட்ட பொது இடங்களில் தான் சுத்தம் செய்ய முடியும். சுடுகாடு,வழிபாட்டு தலத்தையெல்லாம் சுத்தம் செய்ய முடியாது என்று கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அவர்களுக்கு பதிலளித்த துணைத் தலைவர் வழிபாட்டு தலமும் பொது இடம் தான். சுத்தம் செய்யுங்கள் என நிர்ப்பந்தித்துள்ளார். அங்கிருந்த பணித் தள பொறுப்பாளரும் மறுப்பேதும் கூறாமல் அமைதியாக இருந்துள்ளார். இதையடுத்து கிராம மக்கள் நாங்கள் இங்கு வேலை செய்ய முடியாது எனக் கூறியுள்ளனர். தற்போது இதுகுறித்த வீடியோவும் பரவி வருகிறது. இதனால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து ஊராட்சிசெயலர் ஜின்னாவை தொடர்பு கொண்டபோது, அவர் பேச மறுத்துவிட்டார்.
இதையடுத்து உளுந்தூர் பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர்சீனுவாசனிடம் கேட்டபோது, "அவ்வாறு செய்ய விதியில் இடமில்லை. இதற்காக நிர்ப்பந்தம் செய்வது தவறு. இதுகுறித்து விசாரணை நடத்தப்படும்" என்றார்.
தற்போது இதுகுறித்த வீடியோவும் பரவி வருகிறது. இதனால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.