

தென் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் சிதைந்து வரும் வரலாற்றுச் சிறப்புமிக்க கல் மண்டபங்களைப் பாதுகாக்க வேண்டும் என அரசுக்கு வரலாற்று ஆய்வாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுரையில் இருந்து திருமங்கலம், கிருஷ்ணன் கோவில், வில்லிபுத்தூர், ராஜ பாளையம், கடையநல்லூர், தென்காசி, குற்றாலம் வரை 350 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட பழமையான வரலாற்றுச் சிறப்பு மிக்க கல்தூண் மண்டபங்கள் பாது காப்பற்ற நிலையில் சிதைந்து வருகின்றன.
இது குறித்து ராஜபாளையம் ராஜூக்கள் கல்லூரி வரலாற்றுத் துறை உதவிப் பேராசிரியரும், தொல்லியல் ஆய்வாளருமான போ.கந்தசாமி கூறியதாவது:
கடந்த 17-ம் நூற்றாண்டில் தமிழகத்தின் தென்பகுதியை ஆட்சி செய்த நாயக்க மன்னர்களில் சிறந்து விளங்கியவர் திருமலை நாயக்கர். அவர் மதுரையில் இருந்து குற்றாலம் வரையிலும், அதேபோல் திருநெல்வேலி வரையிலும் பல இடங்களில் கல்தூண் மண்டபங்கள், தங்கும் சத்திரங்களைக் கட்டினார்.
அரசு அதிகாரிகள், அமைச்சர் கள், பொதுமக்கள் இப்பாதையில் நீண்ட பயணத்தின்போது இந்த கல் மண்டபங்கள், சத்திரங்களில் தங்கி இளைப்பாறினர். மேலும், திருமலை நாயக்கர் ஆட்சி புரிந்தபோது வில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில், குற்றாலநாதர் கோயில்களில் உச்சிக் கால பூஜை முடிந்த பிறகு மதிய உணவு அருந்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அவர் மதுரையில் இருக்கும்போது இக்கோயில் களில் பூஜை நடைபெறுவதை மணியோசை கொண்டு அறிந்து கொள்ள வழிநெடுக கல் மண்டபங்களை எழுப்பி அங்கு மணிகளைக் கட்டி வைத்தார்.
பூஜை தொடங்கியதும் கல் மண்டபங்களில் உள்ள மணிகளை ஒவ்வொரு மண்டபங்களில் இருந்தும் வரிசையாக அடுத் தடுத்து ஒலிக்கச் செய்து பூஜை தொடங்கியதை அறிந்து கொண்டார். இதனால், கல் மண்டபங்கள் மணி மண்டபங்கள் எனவும் அழைக்கப்பட்டன. அத் தகைய வரலாற்றுச் சிறப்புமிக்க கல் மண்டபங்கள் பெரும்பாலான இடங்களில் சிதைந்து காணப்படு கின்றன.
ராஜபாளையம் அருகே பிரதானச் சாலையின் ஓரங்களில் ஏராளமான கல் மண்டபங்கள் உள் ளன. அவற்றில் பல மண்டபங்கள் அழியும் தருவாயில் இருக்கின்றன. இதில் பல மண்டபங்கள் இன்று வர்த்தகக் கட்டிடங்களாகச் செயல்படுகின்றன. சில கல் மண்டபங்களில் சமூக விரோதச் செயல்கள் நடக்கின்றன.இத்தகைய கல் மண்டபங்களைப் பாதுகாக்க மக்கள் ஆர்வலர் குழுக்கள் இணைந்து செயல் படுகின்றன.
மேலும் ஊரின் பெருமையை யும், பாரம்பரியச் சின்னத்தின் முக்கியத்துவத்தையும் வருங் காலச் சந்ததியினர் அறியும் வகையில் பாதுகாக்க வேண்டும். இதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.