விவசாயிகளை கைவிட்ட சூரியகாந்தி: கோவில்பட்டி பகுதியில் திரட்சியான விளைச்சல் இல்லை

புதூர் அருகே வெம்பூரில் திரட்சியின்றி காணப்படும் சூரியகாந்தி பூக்கள்.
புதூர் அருகே வெம்பூரில் திரட்சியின்றி காணப்படும் சூரியகாந்தி பூக்கள்.
Updated on
1 min read

தூத்துக்குடி மாவட்டத்தில் நடப்பாண்டு புரட்டாசி ராபி பருவத்தில் உளுந்து, பாசி, கம்பு, மக்காச்சோளம், வெள்ளைச் சோளம், கொத்தமல்லி, வெங்காயம் போன்றவற்றை விவசாயிகள் பயிரிட்டனர். புரட்டாசி யில் விதைப்பு செய்து சுமார் ஒரு மாத காலம் மழையில்லை. ஐப்பசி 6-ம் தேதிக்கு பின் இடைவிடாத மழை பெய்தது. அதிக ஈரப்பதம் காரணமாக இளம் பயிர்கள் வளர்ச்சியின்றி அழுகின.

இதனால், ராபி பருவ கடைசி பட்டமாக கொத்தமல்லி, சூரிய காந்தி பயிரிட நிலங்களை விவசாயிகள் தயார்படுத்தினர். ஆண்டுதோறும் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் சுமார் 10 ஆயிரம் ஏக்கரில் கார்த்திகை மாதம் கடைசியில் சூரியகாந்தி விதைப்பு செய்வது வழக்கம். தற்போது சூரியகாந்தி செடிகள் திரட்சியின்றி வளர்ந்துள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

இதுகுறித்து கரிசல் பூமி விவசாயிகள் சங்கத் தலைவர் அ.வரதராஜன் கூறும்போது, “விதைக்காக விதை பண்ணைகளில் பயிரிடப்பட்டிருந்த சூரியகாந்தி விதைகள் போதிய முளைப்பு திறன் மற்றும் திரட்சியான மணிப்பிடிப்பு இல்லாததால், எந்தவொரு விதைக் கடையிலும் சூரிய காந்தி விதை விற்பனை செய்யப்படவில்லை. இதனால் விவசாயிகள் சூரியகாந்தி விதை உற்பத்தி செய்யக் கூடிய தெலங்கானா, மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களுக்கு சென்று, அதிக விலை கொடுத்து வாங்கி விதைத்தனர்.

அந்த விதைகள் முளைத்து தற்போது பூப்பிடித்து வருகின்றன. சுமார் 15 செ.மீ. சுற்றளவுக்கு பூப்பிடிக்க வேண்டிய சூரியகாந்தி மிகச் சிறிய அளவில் பூத்து வருகின்றன. மணிப் பிடிப்பும் திரட்சியாக இல்லை. ஏற்கெனவே இந்தாண்டு கடும் மழை பெய்து அனைத்து மகசூலும் பாதித்த நிலையில், சூரியகாந்தி கை கொடுக்கும் என விவசாயிகள் நம்பினர். ஆனால், அதுவும் கைவிட்டுவிட்டது.

கடந்த 2 ஆண்டுகளாக இயற்கையின் சீற்றத்தால் பாதிக்கப்பட்டு பெரும் நஷ்டத்தில் உள்ள விவசாயிகளை காக்க 2020-2021-ம் ஆண்டுக்குரிய பயிர் காப்பீடு தொகையை உடனடியாக வழங்கவும், நிவாரணம் வழங்கவும் வேண்டும்” என்றார் அவர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in