

என்னை பார்த்து முதல்வராக என்ன தகுதி இருக்கிறது என்று கேட்கிறார்கள். ஆமாம் எனக்கு தகுதி ஒன்றும் இல்லை. ஆனால், அதிமுக, திமுக-வைப்போல, கொள்ளை அடிக்கும் தகுதி எனக்கு இல்லை. நேர்மை இல்லாதவர்கள் தகுதியைப் பற்றி பேசுகின்றனர் என வாழப்பாடியில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பேசினார்.
சேலம் மாவட்டம் வாழப்பாடியில் தேமுதிக-தமாகா-மக்கள் நலக்கூட்டணியின் சேலம் மாவட்ட வேட்பாளர்களை ஆதரித்து நடந்த பொதுக்கூட்டத்துக்கு தேமுதிக சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் அழகாபுரம் மோகன்ராஜ் எம்எல்ஏ தலைமை வகித்தார். இதில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் பேசியதாவது:
இங்கு பேசியவர்கள் தேமுதிக-தமாகா-மக்கள் நலக்கூட்டணியை ஆறுபடை அணி என்று குறிப்பிட்டனர். ஆறுபடை அணிக்கு இனி ஏறும் முகம் தான். ஆறுமுகனை ஏறுமுகன் என்பார்கள். இனிமேல் தான் யாருக்கு ஏறுமுகம்; யாருக்கு இறங்கு முகம் என்று தெரியும்.
என்னை பார்த்து முதல்வராக என்ன தகுதி இருக்கிறது என்று கேட்கிறார்கள். ஆமாம் எனக்கு தகுதி ஒன்றும் இல்லை. ஆனால், அதிமுக, திமுக-வைப்போல, கொள்ளை அடிக்கும் தகுதி எனக்கு இல்லை. நேர்மை இல்லாதவர்கள் தகுதியைப் பற்றி பேசுகின்றனர்.
சேலத்தில் இருந்து வாழப்பாடி வருவதற்கு ஏன் இவ்வளவு தாமதம் என்று கேட்கிறீர்களா? ரோடு நன்றாக இருந்தால் தானே சீக்கிரமாக வர முடியும். குண்டும் குழியுமாக ரோடு இருந்தால் எப்படி வர முடியும். சேலம் மேயர் சவுண்டப்பன், மக்களுக்கு துரோகம் செய்துவிட்டார். நடிகர் சங்க உறுப்பினராக மேயர் சவுண்டப்பன் இருக்கிறார். இவரால் நடிகர் சங்கத்தில் இருப்பவர்களுக்குத்தான் கேவலம்.
மக்களுக்கு துரோகம் செய்யும் எவரையும் நான் மன்னிக்க மாட்டேன். துரோகிகளுக்கு இந்த கூட்டணியில் இடம் கிடையாது. நான் நல்லவனா? கெட்டவனா? என்று எனக்குத் தெரியாது. ஆனால், என்னுடன் கூட்டணியில் உள்ள தலைவர்கள் எல்லோரும் நல்லவர்கள் தான்.
இவ்வாறு அவர் பேசினார்.
பழ.நெடுமாறன் ஆதரவு வேண்டும்
முன்னதாக தருமபுரியில் நேற்று முன்தினம் நடந்த பிரச்சார பொதுக்கூட்டத்தில் விஜயகாந்த் பேசும்போது, என் தந்தையாரின் நெருங்கிய நண்பரான பழ.நெடுமாறன் அய்யாவுக்கு தருமபுரி மண்ணில் இருந்து ஒரு கோரிக்கை வைக்கிறேன். அவர் மக்கள் நலக் கூட்டணிக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும். இந்தத் தேர்தல் தர்மத்துக்கும், அதர்மத்துக்கும் நடக்கும் யுத்தம். 500-க்கும், 1000-க்கும் ஏமாந்து உங்கள் ஓட்டுகளை வீணாக்கி விடாதீர்கள். மக்கள் நலக் கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்யுங்கள், என்றார்.