

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் ஏற்கெனவே நடத்தி முடிக்கப்பட்டுள்ள நிலையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் ஏற்பாடுகளை செய்து வருகிறது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஆகிய நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்த வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
மேலும், மாநகராட்சி மேயர் மற்றும் நகராட்சி, பேரூராட்சி தலைவர் பதவிக்கான இடஒதுக்கீடு மற்றும் வார்டு உறுப்பினர்களுக்கான இடஒதுக்கீடு விவரங்கள், தேர்தலில் போட்டியிடுவோர் செலுத்த வேண்டிய காப்புத் தொகை உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறை களையும் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகளும் தயாராகி வருகின்றன. திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட அனைத்து முக்கிய கட்சிகளும் தேர்தலில் போட்டியிட விரும்புவோரிடம் இருந்து விருப்ப மனுக்களை பெற்று, அவைகளை பரிசீலனை செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளன. அதிமுக சார்பில் விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் அரசியல் கட்சியினர் சுவர் விளம்பரம் செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இம்முறை மேயர் பதவிக்கு நேரடி தேர்தல் இல்லை. வார்டுகளில் வெற்றி பெறும் கவுன்சிலர்களே மேயர், துணை மேயரை தேர்வு செய்யவுள்ளனர். எனவே, கட்சிகளின் நிர்வாகிகள் வார்டுகளில் போட்டியிட ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.