Published : 24 Jan 2022 10:23 AM
Last Updated : 24 Jan 2022 10:23 AM

எட்டயபுரம் அருகே முத்துலாபுரத்தில் மாட்டுத்தாவணியை மீண்டும் செயல்படுத்த வலியுறுத்தல்: 1984-ம் ஆண்டு வரை 66 ஏக்கரில் வணிகம் நடைபெற்ற இடம்

எட்டயபுரம் அருகே முத்துலா புரத்தில் 66 ஏக்கரில், 1984-ம் ஆண்டு வரை இயங்கிய பிரசித்தி பெற்ற மாட்டுத்தாவ ணியை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என, கிராம மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

முத்துலாபுரம் கிராம மக்கள் முற்றிலும் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழிலில் ஈடுபட்டுள்ளனர். முத்துலாபுரத்தில் பிரசித்தி பெற்ற மாட்டுத்தாவணி சுமார் 66 ஏக்கரில் செயல்பட்டு வந்தது. கடந்த 1984-ம் ஆண்டு கடைசியாக இந்த மாட்டுத் தாவணி நடந்தது. அதன் பின்னர் இங்கு மாட்டுத்தாவணி நடைபெறவில்லை.

முத்துலாபுரம் பவானீஸ்வரர் திருக்கோயில் கி.பி.16-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இக்கோயிலில் ஆடித்தபசு அன்று தேரோட்டம் நடைபெற்று வந்தது. தேரோட்டம் நடக்கும் நாள் தொடங்கி ஒரு மாத காலத்துக்கு இங்குள்ள மாட்டுத்தாவணியில் மாட்டுச்சந்தை நடைபெறும். இதேபோல், மாசி மகம் அன்று தொடங்கி ஒரு மாத காலம் மாட்டுச் சந்தை நடைபெறும். .

சந்தை நடைபெறும் நாட்களில் தமிழகம் முழுவதிலும் இருந்து மாடுகளைக் கொண்டு வந்து வியாபாரிகள், விவசாயிகள் விற்பனை செய்து வந்துள்ளனர். மாட்டுத்தாவணியை சுற்றி ஆயிரக்கணக்கான பனை மரங்கள் இருந்தன. அதனால், சந்தை நடைபெறும் நாட்களில் பனங்கருப்பட்டி விற்பனையும் ஜோராக நடந்துள்ளது.

காங்கேயம் காளை, உம்பளச் சேரி மாடு, பர்கூர் மாடு, தேனி மாடு, தாராபுரம், கண்ணாயிரம் என பல வகை மாடுகள் இங்கு விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. முக்கியமாக ரேக்ளா பந்தயத்துக்கு பயன்படுத்தப்படும் சிறிய மாடுகள், பூஞ்சிட்டு மாடுகள், பெரிய மாடுகள் விற்பனைக்கு அதிகமாக வந்துள்ளன. காராம் வகை மாடுகள் முத்துலாபுரம் மாட்டுச்சந்தையில் தான் கிடைத்துள்ளன.

பிரசித்தி பெற்ற இந்த மாட்டுச் சந்தை சுமார் 40 ஆண்டுகளாக செயல்படாமல் போய்விட்டது. இங்கிருந்த பனை மரங்களும் வெட்டி சூறையாடப்பட்டன. தற்போது இங்கு இடிந்து போன சந்தைக் கூடாரங்கள், மருத்துவக் குழுவுக்காக அமைக்கப்பட்ட கட்டிடங்கள், புண்ணாக்கு அரைப்பதற்கான உரல்கள் ஆகியவையே மாட்டுச்சந்தை செயல்பட்டதற்கு சாட்சிகளாக உள்ளன.

இங்கு கால்நடை மருத்துவக் கல்லூரி அமைக்க வேண்டும் என சட்டப்பேரவையில் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. வலியுறுத்தி உள்ளார். இங்குள்ள மக்களும், இந்த இடத்தில் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆடு, மாடு விற்பனை செய்யும் வாராந்திர சந்தை அமைக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

இதுகுறித்து, முத்துலாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் எம்.முனியசாமி கூறும்போது, “பிரசித்தி பெற்ற முத்துலாபுரம் மாட்டுத்தாவணியை தமிழகத்தில் தெரியாதவர்கள் இருக்க முடியாது. இந்த சந்தையின் மேற்கு பகுதியில் எருமை மாடுகளும், கிழக்கு பகுதியில் மற்ற மாடுகளும் விற்கப்பட்டு வந்தன.

மாட்டுச்சந்தை, புதூர் ஊராட்சி ஒன்றியம் சார்பில் நடத்தப்பட்டது. இந்த பழமையான மாட்டுத்தாவணியை தற்காலச் சூழலுக்கு ஏற்ப ஆடு, மாடுகள் விற்பனை செய்யும் வாராந்திர சந்தையாக மாற்றித்தர வேண்டும். அரசு கால்நடை மருத்துவக் கல்லூரி அமைக்க வேண்டும்.

இது தொடர்பாக முதல்வரின் தனிப்பிரிவுக்கு மனு அனுப்பினேன். இதையடுத்து தூத்துக்குடி கால்நடைத்துறை இணை இயக்குநர் எனக்கு அனுப்பிய பதில் கடிதத்தில், முத்துலாபுரத்தில் கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் கால்நடை சந்தை அமைக்க உகந்த இடம் இருப்பதாகவும், இதுகுறித்து அரசுக்கு பரிந்துரை செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x