

35 ஆண்டு காலம் தலித் மக்களின் மேம்பாட்டுக்காக பாடுபட்டு வரும் வழக்கறிஞர் ஆர்.எல்.ரொசாரியோவுக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது.
தி.மலை - வேட்டவலம் சாலை ராஜந்தாங்கல் அருகே உள்ள தலாக்குளத்தில் கடந்த 35 ஆண்டுகளாக ஒடுக்கப்பட்ட தலித் மக்களின் உரிமைக்காகவும், வளர்ச்சிக்காகவும், விதவைகள், முதியோர்கள் முன்னேற்றத்துக்காகவும் போப் தொண்டு நிறுவனம் செயலாற்றி வருகிறது. தலித் சமூகத்தில் பள்ளி செல்லா குழந்தைகளையும், குழந்தை தொழிலாளர் களையும், பள்ளி செல்லாமல் இடை நின்றவர்களையும் படிக்க வாய்ப்பளித்தும், உயர்கல்விக்கு நிதி வழங்கியும் அவர்களின் வாழ்வை உயர்த்தி வருகிறது.
குறிப்பாக, தலித் மக்களின் வளர்ச்சிக்காகவும், சாதிய அடக்குமுறைக்கும் எதிராகவும் அதன் நிறுவன இயக்குநர் வழக்கறிஞர் ஆர்.எல்.ரொசாரியோ பாடுபட்டு வருகிறார்.
போப் தொண்டு நிறுவன செயல்பாடுகளை பிரான்ஸை தலைமையிடமாக கொண்டு கனடா, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் சேவை புரிந்து வரும் முதியோர்கள் உலக அமைப்பு ஆய்வு செய்து சான்று அளித்ததின் பேரில் சர்வதேச முதியோர்கள் பாதுகாப்பு அமைப்பு போப் நிறுவனத்தை அங்கீகரித்துள்ளது. ஆசியாவிலேயே போப் நிறுவனம் மட்டுமே இந்த அங்கீகாரத்தை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்நிலையில் இன்னொரு மகுடமாக போப் நிறுவனத்துக்கு 2021-ம் ஆண்டுக்கான உயரிய விருதான பிரான்ஸ் நாட்டின் மனித உரிமைக்கான விருது கிடைத்துள்ளது. உலகம் முழுவதும் மனித உரிமைக்காக சிறப்பாக பணியாற்றுபவர்களை கண்டறிந்து இந்த விருது வழங்கப்படுகிறது. உலக அளவில் சவுத் ஆப்பிரிக்கா, இந்தியா, பாகிஸ்தான், பிரான்ஸ் உள்பட 5 நாடுகளைச் சேர்ந்தவர்களை பிரான்ஸ் அரசு கடந்த டிசம்பர் 10-ம் தேதி உலக மனித உரிமை தினத்தையொட்டி விருது வழங்க தேர்வு செய்துள்ளது. இந்தியாவில் திருவண்ணாமலை போப் நிறுவனத்தை மட்டுமே பிரான்ஸ் நாடு அங்கீகரித்து இந்த விருதை வழங்கியுள்ளது.
கரோனா பெருந்தொற்று காரணமாக இந்த விருதை பிரான்சுக்கு நேரில் வந்து பெறுவதை தவிர்த்து, அந்தந்த தூதரகம் மூலம் வழங்கப்படும் என அந்நாடு அறிவித்துள்ளது.
அதன்படி, வருகிற பிப்ரவரி 7-ம் தேதி சென்னையில் உள்ள பிரான்ஸ் தூதரகம் இந்த விருதை வழக்கறிஞர் ஆர்.எல்.ரொசாரியோவுக்கு வழங்க வுள்ளது.
மேலும், இந்த விருதோடு சேர்த்து வழங்கப்படும் ரூ.12 லட்சம் தலாக்குளம் மற்றும் சோமாசிபாடியில் படித்து வரும் தலா 20 ஆதரவற்ற குழந்தை களின் கல்வி வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படும் என வழக்கறிஞர் ஆர்.எல்.ரொசாரியோ தெரிவித்துள்ளார்.